கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள இடிகரை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தன் வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை ஏற்படுத்தியிருந்தார். இங்கு, வைக்கப்பட்டுள்ள பானைகளில், ஏராளமான சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன. தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்கு மேல், சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி மூன்று குஞ்சுகளைப் பொரித்தது. தாய் சிட்டுக்குருவி, தினமும் வெளியே சென்று குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டுவந்து, பாசத்துடன் ஊட்டி வளர்த்து வந்தது.
நேற்று முன்தினம், வழக்கம்போல குஞ்சுகளுக்காக இரை தேட தாய்க்குருவி சென்றது. அப்போது, கூட்டில் இருந்த குஞ்சு ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து இறந்துபோனது. இறந்துபோன குஞ்சை செல்வராஜ் வெளியே எடுத்து, சுவர்மீது வைத்துவிட்டு தாய்க்குருவி வருகைக்காகக் காத்திருந்தார். குஞ்சு இறந்துபோனதை அறியாத தாய்க்குருவி, தாய்மை உணர்வுடன் அதற்கு இரை அளிக்க முயன்றது. ஆனால், குஞ்சு வாயைத் திறந்து இரையைப் பெறவில்லை. அப்போதுதான், தாய்க்குருவிக்கு குஞ்சு இறந்துபோனது தெரியவந்தது.
இதனால். தாய்க்குருவி சோகத்தில் ஆழ்ந்தது. நடந்த சம்பவத்தை செல்வராஜூம் கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து, இறந்துபோன சிட்டுக்குருவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வராஜ் குடும்பத்தினர் முடிவுசெய்தனர். சிட்டுக்குருவியின் உடலுக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. குஞ்சு அடக்கம் செய்யப்பட்டதை தாய்க்குருவி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.