வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அம்மாச்சி உணவகத்தின் யாழ்ப்பாண உணவகத்துக்கு பெயர்ப் பலகை வைப்பதில் குழப்பநிலை தொடர்கின்றது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபல்யமாக இயங்கி வருகின்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் அம்மாச்சி உணவகம் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தில் கட்டடம் அமைக்கப்பட்டது.
கொழும்பு விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும் கொழும்பு அரசின் நிதிப்பங்களிப்புடன் கட்டடம் அமைக்கப்பட்டதாலும், அம்மாச்சி உணவகம் என்ற பெயரை வைப்பதில் சில நிபந்தைகளை கொழும்பு அரசு மாகாண விவசாய அமைச்சுக்கு விதித்துள்ளது என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் மும்மொழிக் கொள்கையுடன் அம்மாச்சி உணவகம் என்ற பெயருடன் சிங்களத்தில் ‘கெல பொஜூன் ஹல’ என்ற பெயரையும் இணைத்து மூன்று மொழியிலும் பெயர்ப்பலகை வடிவமைக்கப்பட்டு வடக்கு மாகாண அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாண அரசியல்வாதிகள் இதனை ஏற்கமுடியாது என கூறி வருகின்றனர் என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் புளொட் அமைப்பின் உறுப்பினருமான க.சிவநேசன்(பவான்) கருத்து தெரிவிக்கும் போது;
வடக்கு மாகாணத்தில் முன்னாள் விவசாய அமைச்சர் அம்மாச்சி என்ற தொனிப்பொருளில் உணவகத்தை உருவாக்கி வந்தார். நானும் அதே வழியில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில்தான் அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
வடக்கு மாகாண முதல்வரு டன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் முதல்வரும், அம்மாச்சி உணவகம் என்றே பெயர் வரவேண்டும் வேறு எந்த வாசகமும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எனக்குத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகத்துக்கு நாம் ‘அம்மாச்சி உணவகம்’ என்ற பெயர்ப் பலகையை வைக்காவிட்டாலும் மக்கள் மத்தியில் அது அம்மாச்சி உணவகமாகவே இயங்கி வருகின்றது.
கொழும்பு விவசாய அமைச்சரின் அழுத்தத்துக்கு அமையவே, சிங்களப் பெயரும் வைக்க வேண்டும் என முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.