இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பகுதியில் அண்மையில் அரியவகை கடல் விலங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புள்ளிச் சுறாவைப்போன்ற குறித்த கடல்விலங்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தினால் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடலில் இறந்த நிலையிலேயே இது மீட்கப்பட்டதாகவும், இதன் வாயில் பற்கள் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் பொலநறுவை கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக சுறா மீன்களுக்கு மிகப் பயங்கரமான ரம்பம் போன்ற பற்கள் காணப்படுவது வழமையானதாகும். ஆனால் குறித்த கடல்விலங்குக்கு பற்களே இல்லாமல் இருந்தமை இதனை ஒரு அதிசய கடல் விலங்காக அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இந்தக் கடல் விலங்கு பதினொரு அடி நீளத்தினைக் கொண்டதாக காணப்படுவதோடு இதனை கிரித்தலை அருங்காட்சியகத்தில் அப்படியே பதப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் பிடிக்கப்பட்ட விசித்திர மீன் இனங்களில் ஒன்றாக இது விளங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.