இலங்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இன்று காலை ஏற்பட்டிருந்த சுனாமி பற்றிய பீதி குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் கரையோரப் பகுதி மக்கள், சுனாமி ஏற்படப்போவதாக கிடைத்த செவிவழிக் கதையை அடிப்படையாக வைத்து மிகுந்த பீதியடைந்திருந்தனர்.
பாடசாலைக்குச் சென்றிருந்த பிள்ளைகளும் பெற்றோரால் திருப்பி அழைக்கப்பட்டு வந்ததோடு சில பாடசாலைகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில், குறித்த செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என்றும், அது ஒரு வதந்தி என்றும் மேற்படி சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக குறித்த மையம் கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.