எஸ்எம்ஜி, கோபு ஐயா என்று ஊடகத்துறையினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், (வயது-87) இன்று காலை மட்டக்களப்பில் காலமானார்.
கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த எஸ்எம்ஜி அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில், மட்டக்களப்பு, பூம்புகாரில் உள்ள இல்லத்தில் காலமானார்.
1930ஆம் ஆண்டு ஒக்ரோபர் 03ஆம் நாள் பிறந்த எஸ்எம்ஜி, கொழும்பில் வீரகேசரி நாளிதழில், ஒப்புநோக்குனராக ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
ஏழு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு நாளிதழில் பணியாற்றத் தொடங்கினார்.
ஈழநாடு நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், ஆசிரியராகவும், பணியாற்றிய அவர், பின்னர் ஈழமுரசு, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
செய்திக்கதிர், காலைக்கதிர் இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றிய எஸ்எம்ஜி அவர்கள், மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
ஊர்சுற்றி, கோபு, எஸ்எம்ஜி, செந்தூரன், போன்ற பல புனைபெயர்களில் ஏராளமான கட்டுரைகளை அவர் எழுதிக் குவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு நாளிதழின் ஆசிரியபீட கௌரவ ஆலோசகராகவும், இவர் பணியாற்றியிருந்தார்.
ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த போது, எழுதிய எஸ்எம்ஜியின் சிறைக்குறிப்புகள், தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் இதழில் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தொடராக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், அதனை தொகுத்து ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற நூலாகவும் வெளியிட்டார். ‘ஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு’ நூலையும் எஸ்எம்ஜி எழுதி வெளியிட்டுள்ளார்.
ஈழ ஊடகத்துறையில் அனுபவம்மிக்க பேராசானாக விளங்கிய எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், அவர்களால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் நாள் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.
மறைந்த ஊடகப் பேராசான் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் இறுதிச்சடங்கு, மட்டக்களப்பு பூம்புகார், 4ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும், அவரது குடும்பத்தினர், ஊடக நண்பர்களுடன், இணைந்து, ‘புதினப்பலகை’யும் அவருக்காக தலைசாய்த்து வணக்கம் செலுத்துகிறது.