இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் புதிய திருப்பம்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கிடையிலான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளின் தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 7 தொலைபேசி அழைப்புக்களும் 7 குறுஞ்செய்திகளின் தரவுகளும் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் புதிய திருப்பம்!

இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பாக கடந்த 2ஆம் திகதி இரகசிய பொலிஸாரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தைத் தொடர்ந்து இன்னும் இரு இரகசிய பொலிஸாரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வாக்குமூலப் பதிவின் போதே இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் முகாமையாளர் மற்றும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கிடையிலான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளின் தரவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறிகள் விற்பனையின்போது இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்திவருகின்றது.

அதற்கமைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மோசடியுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவன உயரதிகாரிகளிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்தது.

இதுதவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சரமவிக்ரம மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் மீதும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

மேலும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான கேள்விகளை மின்னஞ்சல் மூலம் தொடுக்கப்பட்டதோடு அதற்கான பதிலை பிரதமர் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிவரை குறித்த ஆணைக்குழு சாட்சியப் பதிவுகளை செய்யவுள்ளதுடன் பரிந்துரைகளையும் முடிவுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய பலரிடமும் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த 2ஆம் திகதி இரகசிய பொலிஸாரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தைத் தொடர்ந்து வேறு இரு இரகசிய பொலிஸாரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.