தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்!! – புருஜோத்தமன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப – தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது.

C.V.Wigneswaran-.Photo_.The-Hindu-1எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரியர் சிற்றம்பலம், சித்தார்த்தனிடம், “…இவர்கள் சொல்வதைக் கேட்டுத் தேவையில்லாமல், கூட்டமைப்பை விட்டு வெளியில் வரவேண்டாம். அது அவசியமில்லாத வேலை…” என்று கூறியிருந்தாராம்.

அதற்குச் சித்தார்த்தன், “….இல்லை, நான் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டேன். அதுவும், புதிய அரசமைப்புச் சம்பந்தமாகப் பேசப்படுகின்ற முக்கியமான இந்தத் தருணத்தில் வெளியில் வரமாட்டேன்…” என்றாராம்.

sittrambalamஅப்போது, சிற்றம்பலம், “…எனக்கு தமிழரசுக் கட்சித் தலைமையோடு பிரச்சினைகள் இருக்கு. அவர்களின் நிலைப்பாடுகள் சில ஏமாற்றமானதுதான்.

ஆனால், தமிழரசுக் கட்சிக்கு எதிரான கூட்டணியொன்றில் எந்தக் காரணம் கொண்டும் நான் சேர மாட்டேன்….” என்று கூறினாராம்.

இப்போது, இரண்டு விடயங்கள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. அதில் முதலாவது, தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடும் ஒருங்கிணைப்போடும், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சில இணைந்து, அமைக்கப்போவதாக அறிவித்துள்ள புதிய தேர்தல் கூட்டணி பற்றியது.

இரண்டாவது, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டவர்கள் இணைந்து பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் அமைக்கப்போவதாகக் கூறப்படும் ‘ஜனநாயக (புதிய) தமிழரசுக் கட்சி’ பற்றியது. அதில், முதலாவது விடயம் பற்றி, இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகிறது.

கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தரப்புகள் சில ஒன்றிணைந்து, 2010 பொதுத் தேர்தல் காலம் முதல், முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

ஆனாலும், அது சாத்தியமாகியிருக்கவில்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், பல தரப்புகளையும் மீண்டும் உற்சாகம் கொள்ள வைத்தன.

Wigneswaran-e1463146532166அதுவும், 2015 பொதுத் தேர்தலில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் எடுத்த நிலைப்பாடானது, பலமான நம்பிக்கைகளை அந்தத் தரப்புகளிடம் விதைத்தது.

அதன்போக்கில், தமிழ் மக்கள் பேரவையின் (இணைத்)தலைமையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டமையும் முக்கியமாக நோக்கப்பட்டது.

தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, பேரவை தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், அது ஆரம்பிக்கப்பட்டபோது, கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பாகவே பல தரப்புகளினாலும் உணரப்பட்டது. குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு எதிரான அமைப்பாகவே நோக்கப்பட்டது.

“பேரவை ஒரு கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ இருக்காது” என்று சி.வி. விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். அத்தோடு, “கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ பேரவை உருமாறினால், தான் அதிலிருந்து விலகிவிடுவேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்டு 23 மாதங்களுக்குள்ளேயே, அது புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு, சி.வி. விக்னேஸ்வரனின் ஒத்துழைப்பும் ஆசிர்வாதமுமின்றி வந்திருந்தது.

பேரவையின் கூட்டமொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் தலைமையுரையாற்றினார். அப்போது, புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில், பேரவையின் முக்கியஸ்தர்களும் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் வெளிப்படுத்தி வரும் நிலைப்பாட்டுக்கு, தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டதுடன், சுயகட்சி அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நடக்க வேண்டும் என்கிற விடயத்தையும் முன்வைத்தார்.

முதலமைச்சருக்குப் பின்னர் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், முதலமைச்சரின் உரை தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

அதை வழிமொழிந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, தனக்கு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறி, முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியே வந்த முதலமைச்சரிடம், புதிய தேர்தல் கூட்டணி தொடர்பிலான கேள்விகள், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டன.

அதற்கு அவர், “தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தை, அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது; அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியாது” என்று பதிலளித்தார்.

முதலமைச்சர் வெளியேறிய பின்னரும், தொடர்ந்த பேரவைக் கூட்டத்தில், பெரும்பான்மையினர், புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அது தொடர்பிலேயே அதிகமாக உரையாடப்பட்டது.

முதலமைச்சரின் நிலைப்பாட்டை ஒட்டி, பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான ரி.வசந்தராஜா உரையாற்றிய போது, “பேரவையின் முக்கியஸ்தரான ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதைக்கடுமையாக எதிர்த்ததுடன், புதிய தேர்தல் கூட்டணி அவசியம்” என வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தின் நிறைவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புதிய தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு, ஓரிரு நாட்களில் பேரவையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறினார்கள்.

இந்தப் பத்தி (செவ்வாய்க்கிழமை காலை) எழுதப்படும் வரையில், அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கவில்லை.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழரசுக் கட்சியின் புதிய (மாற்று) அணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்தால் பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைக்க முடியும் என்பது பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களினதும் சில கட்சித் தலைவர்களினதும் நிலைப்பாடு.

அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் அவ்வப்போது காய்களும் நகர்த்தப்பட்டன. குறிப்பாக, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்டிக் காட்டுவதனூடு, முதலமைச்சரைக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியும் என்றும், அதனூடாக ஊடக கவனத்தைப் பெற்று, புதிய அணிக்கான நம்பிக்கையை மக்களிடம் விதைக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்த போது, அதற்கு எதிராக வெளிப்பட்ட மக்களின் கோபத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

அதன்போக்கில், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பை முதல்நாள் மாலை 05.00 மணிக்கு விடுக்கும் அளவுக்கு, பேரவை தன்னுடைய நிலையைப் பொறுப்புணர்வின்றித் தாழ்த்தியும் கொண்டது.

அந்த, ஹர்த்தாலையும் அதனோடு ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேரணியையும் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சரை ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பதற்கான தருணமாகப் பேரவையும் அதிலிலுள்ள புளொட் தவிர்த்த கட்சிகளும் கையாண்டன.

ஆனால், அப்போதும் முதலமைச்சர் ஒரு காலை முன்வைத்து, சடுதியாகப் பின்னோக்கி வந்து, இரா.சம்பந்தனோடு இணங்கி, பேரவைக்காரர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.

அதன்பின்னர், முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணமொன்றில், அவரைச் சந்தித்த பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான டொக்டர் பூ.லக்ஷ்மன், புதிய தேர்தல் கூட்டணியின்முக்கியத்துவம் குறித்து, நீண்ட நேரம் விளக்கமளித்தாராம்.

அதை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் இறுதியில், சித்தார்த்தன், புதிய தேர்தல் கூட்டணியில் இணைந்தால், தானும் இணைவதாகக் கூறினாராம்.

அன்றிருந்துதான், பேரவைக்காரர்களும் அதிலுள்ள கட்சிக்காரர்களும் சித்தார்த்தனைத் துரத்த ????????????????????????????????????ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுத்தால், புதிய கூட்டணியை இலகுவாக அமைக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

அதன்போக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் சித்தார்த்தனை தொலைபேசியில் அழைத்த, பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர், ஒன்றரை மணித்தியாலங்கள், புதிய கூட்டணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருக்கின்றார்.

அதன்போது பதிலளித்த சித்தார்த்தன், “…முதலமைச்சரும் நானும் பேரவையும் சுரேஷூம் கஜனும் இணைந்தால், பலமான கூட்டணி அமைக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அது, கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பையும் குறைக்கும். ஆனால், புதிய அரசமைப்புகான வாய்ப்புகளை தமிழ்த்தரப்புகள் குழப்பின என்கிற அவப்பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

அரசமைப்பு வருகிறதோ இல்லையோ, அதன் இறுதிக் கட்டம் வரையில் நான் இருப்பதை விரும்புகிறேன். நான் உபகுழுவின் தலைவராக வேறு இருந்திருக்கின்றேன். இந்தத் தருணத்தில் கூட்டமைப்பைவிட்டு வெளியில் வருவதுசரியல்ல…” என்று பதிலளித்தாரம்.

ஆக, சித்தார்தன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற மாட்டார் என்பதை ஏற்கெனவே உணர்ந்த முதலமைச்சர், அவரைக் காட்டிக் கொண்டு பேரவைக்காரர்களிடமிருந்து தப்பித்திருக்கின்றார்.

இதனால், பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான வாய்ப்புகளைப் பேரவை இழந்திருப்பதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.

புதிய தேர்தல் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டில், ‘மகர யாழை’ தேர்தல் சின்னமாகப் பெறுவது வரையில், பேரவை உரையாடல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால், பேரவையின் மூன்று இணைத் தலைவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் ரி.வசந்தராஜாவும் தேர்தல் கூட்டணி அமைப்புக்கு எதிராக இருக்கின்றார்கள்.

சித்தார்த்தனையும் கூட்டமைப்பிலிருந்து பிரித்து உள்ளே இழுத்து வர முடியவில்லை. அப்படியான நிலையில், பேரவையின் புதிய தேர்தல் கூட்டணிக்கான முதல் அடியே பெரும் சறுக்கலோடு ஆரம்பித்திருப்பதாகக் கொள்ள முடியும்.