ரயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது.
கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.
குறித்த கப்பல் 70.5 மீட்டர் நீளமும் 600 தொன் எடையையும் உடையது. இதில் 2000 தொன் சரக்கு ஏற்றப்பட்டு, கப்பலில் பொருத்தப்பட்ட 26 தொன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
மின்சார சரக்கு கப்பல் இயக்கும் நிகழ்ச்சி “குயாங்ஷு” ஆற்றில் நடந்தது. இக்கப்பல் மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
இது சீனாவில் “குயாங்ஷு ஷிப்யார்டு” கம்பெனியால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.