நைஜீரியாவின் வடகிழக்கே அதன் தலைநகரான மைடுகூரியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 29பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேற்றைய தினம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குண்டுதாரிகள் நடத்தியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சொல்லப்பட்டாலும் பொஹோஹராம் அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மைடுகூரி நகரில் நேற்றைய தினம் சுமார் 4 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றைய தாக்குதல்கள், திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைய முன்னர் இடம்பெற்றமையினால் உயிர்ச் சேதங்கள் பாரியளவு குறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்குடன், பொகோ ஹராம் கிளர்ச்சியாளர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நைஜீரியாவில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களால் நடத்தப்படும் தற்கொலை தாக்குதல்களில் அண்மைக் காலமாக அதிகளவான பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தீவிரவாத இயக்கம் கடந்த 2009ஆம் ஆண்டு தாக்குதல்களினைத் தொடுத்ததிலிருந்து இற்றைவரை சுமார் 20000 மக்கள் கொல்லப்பட்டும் 1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துமுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இதேவேளை போர்னோ பகுதியில் அரைவாசிக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மில்லியன்கணக்கான மாணவர்கள் தமது வகுப்புக்களை மீள ஆரம்பிப்பதற்கு முடியாமலிருப்பதாகவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.