யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்குகள் எல்லாம் பொலிஸாரின் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மேல் நிதிமன்ற நீதிபதி இளஞ்செழியனிடமே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், “சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பயன்படுத்தவேண்டும். சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என வட மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அவர்,
“யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களை அடக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பணியாற்றும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குடாநாட்டின் மூலை முடக்கெல்லாம் பொலிஸார் சுற்றுக்காவலிலும் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் நடந்துவரும் வாள்வெட்டுச் சம்பவங்களின் எதிரொலியாக யாழின் முக்கிய வீதியெங்கும் பொலிஸாரின் அனைத்துப் பிரிவினரும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.