தற்கொலை எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் குறித்த செய்தியால் தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.
ஆனால், அத்தகைய ட்வீட்களை தானாக அழிப்பது நடைமுறை சத்தியமற்றது என்று அவர் கூறியுள்ளார்.
ஜப்பானில் உள்ள ஜாமா நகரில், ஒன்பது பேரின் உடல்கள் ஒரு 27 வயது நபரின் அடுக்கு மாடி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை ‘ட்விட்டர் கொலையாளி’ என்று செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்ட தகாஹிரோ ஷிராஷி அவர்கள் இறக்க தாம் உதவுவதாகவும், சிலரிடம் தானும் அவர்களுடன் சேர்ந்து இறக்கப்போவதாகவும் கூறியுள்ளார். அவர் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகவும் இளம் வயது நபருக்கு 15 வயது.
காணாமல்போன தனது பெண் தோழியைத் தேடி வந்த ஆண் ஒருவரையும் அவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலைக் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இறந்த உடல்களை கண்டுகொள்ளாமல் விட்ட குற்றச்சாட்டுகளே இதுவரை அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
“எங்கள் சேவையை நேர்மறையாகவும் நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று டோர்சே ஜப்பான் அரசு தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.