சில நொடிகள் முன்னதாக புறப்பட்டமைக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ரயில்வே!

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

பொதுவாக போக்குவரத்துக்கான வண்டிகள் கால தாமதமாக புறப்பட்டோ அல்லது வந்தோ சேருமானால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

ஆனால், ஜப்பான் நாட்டு ரெயில்வே வித்தியாசமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, 20 நொடிகளுக்கு முன் ரெயிலை இயக்கியதற்காக தனது பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள மினாமி பகுதியிலிருந்து நகரேயாமா பகுதிக்கு காலை 9.44.40 மணிக்கு சுகுபா விரைவு ரெயில் புறப்படுவது வழக்கம்.

ஆனால், கடந்த 14-ம் தேதி சுகுபா விரைவு ரெயில் காலை 9.44.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே நிறுவனத்துக்கு சிலர் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரெயில்வே நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக, அதாவது 20 நொடிகளுக்கு முன்னதாக சுகுபா விரைவு ரெயிலை ஓட்டுநர் இயக்கியுள்ளார். அவர் நேரத்தை சரிபார்க்காமல் எடுத்துவிட்டார்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் இதுபோல் நடக்காது என தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக, புறப்பட்ட ரெயிலுக்காக ஜப்பான் ரெயில்வே பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

இவ்வாறான சிறந்த செயற்பாடுகளினால் தான், ஜப்பானியர்கள் எம் எல்லோரையும் விட ஒரு படி முன்னணியில் இருக்கிறார்கள் ….