வடக்கு ஃபிரான்சில் உள்ள கிராமமான லாவண்டியில் ஒரு மழை நாளில் ஒரு தனித்துவம் மிக்க சடங்கிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஃபிரான்ஸ் மற்றும் இந்திய அதிகாரிகள் குழுமியிருந்த, இரு இந்திய ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்து பூசாரி ஒருவர் வந்தார். இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த இரு சவப்பெட்டிகள் முன்பு இந்து மந்திரங்கள் மெல்லிய காற்றுக்கும், இடைவிடாத முழக்கங்களும் இடையே ஓதப்பட்டன.
அங்கு இருந்த ஒரு சாக்கடையை அகலப்படுத்தும்போது, அடையாளம் அறியப்படாத இரு இந்திய ராணுவ வீரர்கள் அங்கு புதைக்கப்பட்டிருப்பது 2016-இல் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் சீருடையில் 39 என்று குறிக்கப்பட்டிருந்த எண் அவர்கள் முதல் உலகப்போரின்போது பிரிட்டன் சார்பாக ஃபிரான்சில் போரிட்ட இந்தியாவின் 39வது ராயல் கர்வால் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.
அந்தப் படைப் பிரிவு இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. அவர்களைத் தொடர்புகொண்டு ஃபிரான்ஸ் அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
பிரிகேடியர் இந்தர்ஜித் சட்டர்ஜீ அந்த இறுதிச் சடங்கிற்கு சென்றிருந்தார்.
“1914-1915 காலகட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது பட்டாலியன்கள் ஃபிரான்சில் போரிட்டனர். லாவண்டி மயானத்தில் அவர்களுக்கு வழக்கமான ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது,” என்கிறார் அவர். அவருடன் ஒரு சிறிய இந்தியக் குழுவும் ஃபிரான்ஸ் சென்றிருந்தது.
ஃபிரான்சுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் வத்ரா, ஃபிரான்ஸ் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டில் வாழும் சுமார் 150 இந்தியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
“போரில் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை நினைத்துக் கண்ணீர் விட்டோம். தீய சக்திகளை நன்மை வென்றதே இந்த போர், ” என்கிறார் ஃபிரான்ஸை தனது வீடு என்று அலைக்கும் வேத் பிரகாஷ்.
அவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் மண் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
பிரிட்டனுக்காக முதல் உலகப் போரில் பங்கேற்ற 10 லட்சத்துக்கும் மேலான இந்திய வீரர்களில் சுமார் 60,000 பேர் வீர மரணம் அடைந்தனர்.
வரலாற்றுப் நூல்களில் இந்திய வீரர்களின் தியாகம் மறக்கப்பட்டு வருவதாக பலரும் கவலை எழுப்பும் காலகட்டத்தில், இந்த கிராமம் அவர்களை இன்னும் நினைவு கூர்கிறது.
லாவண்டி மயானம் மட்டுமல்லாமல் நூவே-சாப்பாலிலும் அவர்களுக்கு நினைவுச் சின்னம் உள்ளது. இறந்தவர்களை நினைவுகூரும் ஞாயிரின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
“போரில் மரணம் அடைந்த மனிதர்களுடன் தற்போது வாழும் மனிதர்களுக்கு ஒரு பிணைப்பை உருவாக்கவே விரும்புகிறோம். இந்த விடயத்தில் இறந்தவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு போரில் மறைந்தவர்கள்,” என்கிறார் காமன்வெல்த் போர் நினைவிட ஆணையத்தின் லிஸ் ஸ்வீட்.
1915-இல் மார்ச் 13 முதல் 15 வரை நடந்த நுவே-சாப்பல் போரில் பங்கேற்று, பிரிட்டிஷ் அரசின் ‘விக்டோரியா கிராஸ்’ கௌரவத்தைப் பெற்ற கப்பர் சிங் நேகியின் பேரனும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். அவர் தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.
அப்போது, இந்திய மற்றும் பிரிட்டன் துருப்புகள் சர் டக்ளஸ் ஹெய்கால் வழிநடத்தப்பட்டன.
1915-இல் கொஞ்ச காலம் போர் களத்தில் இருந்து வெளியில் வைக்கப்பட்டிருந்த இந்திய படைகள் மீண்டும் அந்த மோசமான போரில் ஈடுபடுத்தப்பட்டனர்
நுவே-சாப்பலில் நடைபெறும் போரில் மறைந்த இந்திய வீரர்களை நினைவுகூரும் நிகழ்வில் இந்திய வம்சாவளியினரும் கலந்து கொள்கின்றனர்.
அவர்களுக்கு, ஃபிரான்ஸ் நாட்டுக்கு தாங்கள் எங்கிருந்து வந்தோம், எதற்கு வந்தோம் என்பதை நினைவுபடுத்தும் சூழல் அது.
“இந்திய வம்சாவளியினருக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வு. எங்களை இது வரலாற்றுடன் தொடர்பு படுத்துகிறது. இந்த மாதிரியான சம்பவங்களால் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். இது நூல்களில் எழுதப்பட்டுள்ள ஒரு விடயம் மட்டுமல்ல. நாங்கள் அதை உணர்கிறோம்,” என்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரஞ்சித் சிங்.
சுதந்திரத்திற்காக, ஃபிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் ராத்தியம் சிந்தியதற்கு அஞ்சலி செலுத்த அவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அவர்களின் தியாகத்தின் நினைவாக, அவர்கள் ரத்தம் சிந்திய இடத்தின் மண் இப்போது இந்தியா வரவுள்ளது.