பாலுறவுக்கு மறுத்த மனைவி படுகொலை

ஹரியானாவில் பாலுறவுக்கு மறுத்த பெண்ணை அவரது கணவன் கழுத்தை நெறித்துப் படுகொலை செய்ததாக அம்மாநிலப் போலீஸ் தெரிவித்துள்ளது.

thumbgen

சுமன் என்ற அந்தப் பெண்ணை செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ஒரு சண்டைக்குப் பிறகு அவரது கணவன் சஞ்சீவ்குமார் (35) தூக்கிலிட்டுக் கொண்றுவிட்டதாகவும், சஞ்சீவ் குமாரே குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரி ரமேஷ் ஜக்லன் பிபிசியிடம் தெரிவித்தார். ஜோகன் கேரா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

“கொஞ்ச நாளாகவே சுமன் உறவுக்கு மறுத்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்றும் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். எரிச்சலடைந்த சஞ்சீவ் மனைவியை கழுத்தை நெறித்துப் படுகொலை செய்தார். நாங்கள் அவரை கைது செய்துள்ளோம்,” என்றார் ஜக்லன்.

இந்த தம்பதிக்குத் திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்தியாவில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை குடும்ப வன்முறை தொடர்பான ஒரு புகார் போலீசுக்கு வருகிறது. ஆனால், குடும்ப வன்முறை சம்பவங்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகம் என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்கூட பெண்களுக்கு எதிராகப் பெருகும் குடும்ப வன்முறைகளைத் தடுக்க உதவவில்லை. காரணம் இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவதில்லை.

குடும்ப வன்முறைக்கான அடிப்படைக் காரணம் ஆணாதிக்கமே என்றும், ஆண்களைவிட பெண்கள் குறைந்தவர்களாகக் கருதப்படுவதாகவும், கணவன் மனைவியை அடிப்பது பெரும்பாலும் தவறில்லை என்ற மனோபாவம் இருப்பதாகவும் பிபிசியின் கீதா பாண்டே தெரிவித்துள்ளார்