அணை ஒன்றை சுற்றி திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, ஆளில்லா விமானத்தை (ட்ரோனை) பயன்படுத்தி கண்காணிக்கும் பணியை தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்ட காவல்துறை துவங்கியுள்ளது.
பொதுவிடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் பெண்களை கேலி செய்வதை தடுப்பது போன்றவற்றிற்காக கடந்த மாதம் முதல்முறையாக இந்த ஆளில்லா விமானத்தை காவல்துறை பயன்படுத்தியது.
ஆனால், இப்போது, திறந்தவெளியில் மலம் கழிப்போரை கண்டறிய இந்த ஆளில்லா விமானம் உதவுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த ஆளில்லா விமானத்தால் எடுக்கப்பட்ட காணொளி பதிவை பயன்படுத்தி, பொதுவிடத்தில் மது அருந்தியதற்காக 260 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக யார் மீதும் வழக்குப்பதியப்படவில்லை.
தெலங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகர், வராங்கல், சித்தீப்பேட் மற்றும் சீர்சில்ல மாவட்டங்களுக்கு மனாயிர் கீழணை குடிநீர் வழங்கிவருகிறது.
இந்த அணைக்கு அருகிலுள்ள இரு பூங்காக்கள் மற்றும் அணைக்கட்டுகள் பாதசாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.
கரீம் நகர், ஸ்மார்ட் நகர பட்டியலில் உள்ளடங்கியுள்ளதால், அங்குள்ள வாழ்க்கையின் பாணி மாற்றங்கள் உள்பட அனைத்திலும் தரமான வாழ்வை எட்டுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு காவல்துறையினரோடு கைகோர்த்து செயல்படுவதாக கரீம் நகரவாசியும், ஏரி பாதசாரிகள் கூட்டமைப்பின் உறுப்பினருமான திரு.நாகராஜ் கூறியுள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழிப்போருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அறிவுரை கூறுவது ஒரு நேர்மறை நடத்தை மாற்றத்தை உருவாக்கி இருப்பதாக நாகராஜ் தெரிவிக்கிறார்.
“இது அவர்களை வெட்கப்படுத்த அல்ல. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதற்குதான் இந்த முயற்சி. நாங்கள் அவர்களுக்கு முதலில் மாலை அணிவிக்கிறோம். பின்னர், இந்த அணை தண்ணீரைதான் நாம் குடிநீராக பயன்படுத்துகிறோம் என்பதை விளக்குகின்றோம்” என்கிறார் நாகராஜ்.
2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வாழ்கின்ற இந்த மாவட்டத்தில், இந்த ஆண்டுக்குள் 40 ஆயிரம் தனிப்பட்ட கழிவறைகளை கட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 39 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
திறந்தவெளியில் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்க கரீம் நகர் நகராட்சி தீர்மானம் கூட நிறைவேற்றியது.
பெரும்பாலான நகரவாசிகளும் தனிப்பட்ட கழிவறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டியிருப்பதாக கரீம் நகர் நகராட்சி ஆணையர் கே. ஷாஷாங் தெரிவிக்கிறார்.
“கழிவறைகள் பற்றாக்குறை என்பதல்ல. நடத்தை மாற்றம்தான் தேவைப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்தாவிட்டால், நாங்கள் அபராதங்கள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று ஷாஷாங் தெரிவிக்கிறார்.
ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு. காவல்துறை அவர்களின் பங்களிப்பை வழங்குவதாக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் இனம்காணப்பட்ட பின்னர். ஏரி காவல்துறையோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகரவாசிகளை கொண்டுள்ள குழு அறிவுரை வழங்குகிறது என்று போலீஸை தொடர்பு கொண்டபோது, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“திறந்தவெளியில் மலர் கழித்ததற்கு யாரையும் கைது செய்யவில்லை. வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தங்களுடைய சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் பொறுப்புணர்வு. தூய்மையான சுற்றுச்சூழலை பெற்றிருக்க ஒன்றுசேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை” என்று இந்த மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், தங்களுடைய இயற்கை அழைப்புக்களை திறந்தவெளியில் நிறைவேற்றி கொள்வோரை இனம்காண ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது அந்தரங்க உரிமை பிரச்சனை தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
மனித உரிமை ஆர்வலரான வி. சுதாகர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில். “திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்பாக, இந்த மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க ஏன் வருகிறார்கள் என்று அதிகாரிகள் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் முதலில் சமூக கழிவறை ஒன்றை கட்டிய பின்னர் அறிவுரை அமர்வுகளை நடத்தலாம்” என்று கூறியுள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழித்து இனம்காணப்படுவோரை, பொதுவாக பெயரை கூறி அடையாளப்படுத்தப்படுவதும், அவர்களை வெட்கமடைய செய்வதும் இந்தியாவில் ஒரு விவாத அம்சமாகவே உள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளன.