சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ., கோர்ட் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

final_3_12287

கடந்த 1994-ம் ஆண்டு சசிகலாவின் கணவர் நடராஜன் லண்டனிலிருந்து ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் என கூறி இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், நடராஜன் வாங்கியது 1994ல் வெளியான புதிய ரக கார் என்பது தெரியவந்தது.

இதன் மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளர் சுசுரிதா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இதில் பாலகிருஷ்ணன் மட்டும் தலைமறைவானார். இதனையடுத்து குற்ற வழக்குகளை விசாரிக்கும் எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் 2010-ல் நடராஜன் உட்பட 4 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில் இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்தது.