‘வீட்டில் மாட்டிவைக்கப்பட்டுள்ள யேசு புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதிபர் ஜின்பிங் புகைப்படத்தை மாட்டுங்கள்’ என அதிகாரிகள் கிராம மக்களை நிர்பந்தித்துவருவதாக, ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”சீனாவில் யூகான் கவுன்டி என்ற பகுதியில், அந்த நாட்டிலேயே மிகப் பெரிய ஏரியான போயங் அமைந்துள்ளது. கிறிஸ்தவ மக்கள் நிறைந்த பகுதி இது. கிறிஸ்தவ மக்களிடம் உள்ளுர் அதிகாரிகள், ‘ யேசு உங்களை வறுமையிலிருந்து விடுவிக்க மாட்டார். உங்கள் நோயைக் குணப்படுத்த மாட்டார். எனவே இயேசு புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதிபர் ஜின் பிங்கின் அழகிய புகைப்படத்தை வீட்டில் மாட்டுங்கள் என நிர்பந்தித்துவருகின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
” அதிகாரிகளின் உத்தரவை ஏற்று, 624 வீடுகளிலிருந்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த புகைப்படங்களை மக்கள் அகற்றியுள்ளனர். 453 வீடுகளில் ஜின் பிங்கின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன” என ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.