பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில், காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிடிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தது.
அப்போது, துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததால், கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அதன்பின்னர், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அடுத்த நாளே முதல்வராக பதவியேற்றார்.
இதற்கு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான சரத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாஜகவுடன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதவாளர்களுடன் பிரிந்தார்.
இந்நிலையில், அக்கட்சியின் அம்பு சின்னத்தை இரு அணிகளும் உரிமை கொண்டாடியதால், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக இருப்பதால், சரத் யாதவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
மேலும், உண்மையான ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார் தலைமையில் தான் இருப்பதாக கூறி அம்பு சின்னத்தை அவர்களுக்கே ஒதுக்கியுள்ளது