ஜனாதிபதி ஆணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான தகவல்கள் எங்கே போய்விட்டன

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆணைக்குழு சேகரித்த தகவல்களுக்கு நடந்தது என்ன?

ஜனாதிபதி ஆணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான தகவல்கள் எங்கே போய்விட்டன என வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(17) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான தகவல்களை புதிய விண்ணப்பங்களின் ஊடாக எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் சேகரிக்குமாறு சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பிலேயே மாகாண அமைச்சர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.

போரின் போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோர், படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு இருக்கையில் அவசரமாக விண்ணப்பங்களை அனுப்பி காணாமற்போனோர் தகவல்களை சேகரிப்பதற்கான நோக்கம்தான் என்ன?

காணாமற்போனோரின் உறவுகளால் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நல்லாட்சி அரசு, இவ்வாறான அவசர செயற்பாடுகளை முன்னெடுத்து சர்வதேசத்துக்கு நாடகமாடுகின்றது’ என்று மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டார்.