ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அதிகாலை வரை வருமான வரித்துறை சோதனை

ஜெயவலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்துவந்த, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

வெள்ளிக்கிழமையன்று இரவு சுமார் 9 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை, ஜெயலலிதா வீட்டிற்குக் காவலாக இருந்த காவல்துறையினர் மறித்தனர். அதன் பிறகு, வருமான வரித்துறையினர் தேடுதல் நடத்துவதற்கான ஆணையைக் காண்பித்தனர்.

ஜெயலலிதாவின் இல்லத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் பயன்படுத்திய அறைகளில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்படவில்லை. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானதும் இளவரசியின் மகனும் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமன் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தார்.

கலைராஜன் போன்ற அ.தி.மு.க. நிர்வாகிகளும் சில அ.தி.மு.க. தொண்டர்களும் போயஸ் தோட்ட பகுதியில் குவிந்தனர். அவர்கள் வீட்டின் அருகில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால், அவர்கள் தமிழக அரசை எதிர்த்தும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் அவர்களை வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அகற்றினர்.

சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் தோட்டத்திற்கு வந்தார். ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான தன்னிடம் அனுமதி பெறாமல் இந்த சோதனைகள் நடப்பதாகவும் தன்னை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் கோரினார். ஆனால், காவல்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

போயஸ் தோட்டசுமார் 2 மணியளவில் இந்த சோதனைகள் முடிவடைந்தன.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவேக், “ஒரு லேப்டாப், பென் டிரைவ் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களின் தொகுப்பை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக வருமான வரித்துறையினர் எங்களை அழைத்து விசாரித்தால் விளக்கமளிப்போம்” என்றார்.

மேலும் முதல்வர் பயன்படுத்திவந்த அறையைச் சோதனையிட வேண்டும் என வருமான வரித்துறையினர் கோரியதாகவும் தாங்கள் அதற்கு மறுத்துவிட்டதாகவும் விவேக் தெரிவித்தார்.

இந்த சோதனைக்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக வி.கே. சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் ஐந்து நாட்கள் நடத்தப்பட்டன.

ஜெயலலிதாவின் இல்லம் அரசு அதிகாரிகளால் சோதனைக்குள்ளாவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக 1996வது வருடத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.