மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் நேற்றிரவு சுமார் 9 மணிமுதல் அதிகாலை 2 வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல அரசியல்வாதிகளின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்ற வாரம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் சென்னை போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான “வேதா நிலையத்திற்கு” வந்த வருமான வரித்துறையினர் ஜெயலலிதா தவிர்த்து சசிகலா மற்றும் பலர் தங்கியிருந்த அறைகளில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
புளியோதரை பிரசாதமாவது கிடைச்சுதா?
“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் போயஸ் தோட்ட ரெய்டு நடத்திருக்குமா?” என்று முகநூலில் கேள்வியெழுப்பியுள்ளார் தீனா என்ற பயன்பாட்டாளர்.
“ஏம்பா…. ஐ.டி.காரங்களா… எதோ கோவிலை ரெய்டு பண்ண போயிட்டீங்களாமே? அது ஏழை கடவுளோட கோவில்… உண்டியல்ல ஒன்னும் இருந்திருக்காது… புளியோதரை பிரசாதமாவது கிடைச்சுதா?” என்று வருமான வரித்துறையினரின் சோதனை குறித்தும், ஜெயலலிதாவை தெய்வம் என்று கொண்டாடுவோர் குறித்தும் முகநூலில் கிண்டலாகக் கருத்து பதிவிட்டுள்ளார் சுந்தரம் சின்னுசாமி என்ற பயன்பாட்டாளர்.
சமாதியை தோண்டாதது மட்டும்தான் மிச்சம்?
அன்பு அரசு என்ற முகநூல் பயனர் “ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை – சமாதியை தோண்டாதது மட்டும்தான் மிச்சம் போல” என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை. “அம்மா”ஆவி உங்கள “சும்மா ” விடாதுடா” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜெகதீஸ்வரன் என்ற பயனர்.
இது வரவேற்கதக்கது
“கடந்த 4 மாதமாக ஜெயலலிதா இல்லம் இ.பி.எஸ். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதினால் சசிகலா பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸே ஏதேனும் போலி ஆவணங்களை பதுக்கி வைத்து பின் வருமானவரித் துறையை அனுப்பி கைப்பற்றி இருக்கலாம்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தினேஷ் குமார் என்பவர்.
“ஜெயலலிதா கொலைக்கான முழு காரணங்களை அறியும் சோதனை முயற்சி வரவேற்கதக்கது” என்று முகநூலில் பதிவிட்டுள்ளார் ராஜ மாணிக்கம் என்ற பயன்பாட்டாளர்.
“ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அக்யூஸ்ட் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்துவது எப்படி தவறாகும்?” என்று வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் அன்பு செல்வன் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர்.