காலியில் இடம்பெற்றுள்ள வன்முறை சம்பவத்திற்காக மதகுரு ஒருவரால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
காலி, கிந்தோட்டை – விதானகம, சபுகம பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மீது நேற்று மாலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
காலியில் நேற்றைய தினம் வன்முறை இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக சென்றபோது அங்கு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாம் சந்தித்தோம்.
இதேவேளை மக்களின் பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியிலுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது மக்கள் சம்பவம் தொடர்பில் எம்மிடம் தெரிவிக்கையில், இந்த வன்முறை செயற்பாடானது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்கள்.
அத்துடன், இதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும் மதஸ்தலம் ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், குறித்த மதகுருவால் வெளி மாவட்டங்களில் இருந்து தாக்குதலுக்காக ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளார்.