”ஈழம் என்பது இலங்கைக்கான தூய தமிழ்ப் பதம் தானே? ஈழம் தமிழீழத்தை மட்டும் குறிப்பதாக சொல்கிறார்கள், ஏற்றுக்கொள்ளலாமா?” என்றொரு கேள்வி தற்பொழுது பரவலாக எழுகின்றது.
சந்தேகமே இல்லை. ஈழம் என்பதும் இலங்கை என்பதும் நாம் வாழும் இந்த முழுத் தீவுக்கும் உரித்தான பண்டைய தூய தமிழ்ப் பெயர்கள்தான். சங்ககாலத்திலேயே ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதென்றால், ஈழம் தூய தமிழ்ச் சொல் தான் என்பதற்கு அதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
தொல்காப்பியம் ஈழத்தை கீழ் நாடு என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” இதன் பொருள், கீழ் என்றால் இரண்டு பொருள் இருக்கின்றது என்பதாகும். ஒன்று தாழ்வானது, மற்றொன்று கிழக்குத் திசை. கிழக்கை கீழ் என்றும் மேற்கை மேல் என்றும் வழங்கும் வழக்கம் தொல்காப்பிய காலத்திலிருந்தே வந்துள்ளது. இதற்குரிய காரணம், தமிழ் நாட்டின் கிழக்குப் பக்கம் தாழ்ந்தும் மேற்குப்பக்கம் உயர்ந்தும் இருப்பதுவே. கடல் கடந்து கிழக்குத் திசையிலே இருந்த தீவு கீழம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கிழக்குத் திசையிலே உள்ள நிலம். கீழ்+நிலம்=கீழம் என மருவிப் புணர்ந்துள்ளது.
கடைச் சங்கத்திற்கும் முற்பட்ட தொல்காப்பிய காலத்தில் கீழம் என அழைக்கப்பட்ட தீவு பின்னர் மருவி ஈழமாகியதாக சொல்கிறார்கள். சங்க காலத்தில் ஏழு பாடல்கள் பாடிய ஈழத்துப் பூதந்தேவனார், மற்றும் பட்டினப்பாலையில் வரும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் என்ற வரிகள் ஈழத்தை இலங்கைத் தீவின் பண்டைய பெயர் என்பதை அடித்துக் கூறுகின்றன. ஈழம் என்பது இலங்கைத் தீவுக்கும், காழகம் என்பது பர்மாவுக்கும் வழங்கப்பட்ட பழங்காலப் பெயர்களாகும். கரிகாலன் காலத்தில் பூம்புகார் நகரம் ஈழத்து உணவான இனிப்புப் பண்டங்களால் நிறைந்து காணப்பட்டதாம். அந்த இனிப்புப் பண்டங்கள் கரும்பில் செய்யப்பட்டதாகவும்; பனையில் செய்யப்பட்ட பனாட்டு, பனங்கட்டி போன்றனவாகவும் இருக்கலாம் என தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பனாட்டு ஈழத் தமிழரின் தனித்துவமிக்க உணவாகும். இதனை தொல்காப்பியம் ’பனா அட்டு’ என்கிறது.
பிற்காலச் சோழர் காலத்தில் வந்த முத்தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கியத்திலும் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிள்ளிவளவனின் வீரத்தைப் பாடும்போது,
“கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்து நீர் தன்னுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே
நம் கோழியர் கோ கிள்ளி களிறு”
என்கிறது. அதாவது கிள்ளிவளவனின் யானையானது காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்து பின்னர் வட இந்திய நகரமான உச்சயினியில் ஒரு காலையும் அங்கிருந்து திரும்பி ஈழத்தில் மறுகாலையும் வைத்து சோழனின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் கடல்கடந்து ஈழ நாட்டிலும் பரவி இருந்ததென்று பாடப்பட்டுள்ளது.
ஈழம் மட்டுமல்ல இலங்கையும் பண்டைய தமிழ்ப் பெயர்தான். இலங்கு+ஐ=இலங்கை. இலங்கு என்றால் ஒளிபொருந்தியது என்று பொருள். சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படை இலங்கையை ‘தொன்மாவிலங்கை’ என்கிறது. அதே நேரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தொல் இலங்கை என்கிறது. இப்படி ஏராளம் இலக்கிய ஆதாரங்கள் இலங்கைக்கு உண்டு.
இலங்கையை சிங்களவர்கள் லங்கா என்றனர். அது அவர்களின் பேச்சுமொழியில் உள்ள திரிபு. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும்போது வேற்றுமொழிக்காரர்களுக்கு இந்த கொச்சைக் குறைபாடு வருவது வழக்கம். அதனடிப்படையிலேயே அவர்கள் இலங்கையை ஸ்ரீலங்கா என சிங்களத்தில் அழைக்கிறார்கள். இன்னும் சிங்களவர்கள், லங்கா என்றுதான் அழைக்கிறார்கள். எவ்வாறாயினும் இலங்கையும் ஈழமும் இந்தத் தீவில் வாழ்ந்த பூர்வ குடிகளின் வழித்தோன்றல்களான எமக்கே உரியவை. சிங்களம் சமஸ்கிருதத்தோடு சம்மந்தப்பட்டது.
ஈழம் இலங்கையில் சர்ச்சைக்குரியதாக மாறியதென்றால் பிரிவினை தோன்றிய காலத்தின்பின்னர்தான். தமிழ் ஈழம் என்ற தனி நாட்டுக் கோரிக்கை ஏற்பட்டபோதுதான் ஈழம் சர்ச்சைக்குரியதாகியது. ஆனால் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலம் சர்ச்சைக்குரிய காலம் இல்லை; பிரிவினை தோன்றிய காலம் இல்லை. அதன்போது அவை முழுத் தீவையும் பொருள்படக்குறித்த பெயராகத்தான் ஈழம் என்பதை எடுத்துக்கொண்டன.
ஈழத்தை தமிழீழத்தோடு சுருக்குவது முறையற்ற செயலாகும். இந்த முழுத் தீவுக்குமான தீவின் பூர்வ குடிகள் நாம் அல்லர் என்ற எண்ணக்கருவை வளர்த்துவிடுவதாகும். தமிழீழம் என்பது சந்தர்ப்பவசத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சொல். அதாவது காலம் காலமாக தெற்கிலிருந்த தமிழ் குடியேற்றங்கள் சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வடக்கு கிழக்கிற்கு தள்ளப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரின் தலை நகரங்களாக இருந்த அனுராதபுரம் பொலநறுவை போன்றன இன்று எப்படி தனிச் சிங்கள மாவட்டங்களாக இருக்கின்றனவோ அதைப்போலவே தென் மாவட்டங்களிலிருந்த எமது இனப்பரம்பலும் சுருங்கிவந்துள்ளது.
தமிழீழ எண்ணக்கரு உருவானபோது தமிழர் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்புக்கள்தான் கணக்கெடுக்கப்பட்டன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் போன்றன அன்று எமது பெரும்பான்மையைப் பறைசாற்றின. பாரம்பரிய பூமிகளாகத் திகழ்ந்தன. அதன்போது உருவானதுதான் தமிழீழம் எனும் எண்ணக்கரு. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. கிழக்கில் சிறுபான்மையராகிவிட்டோம். எருமைத்தீவு எனப்பட்ட புத்தளத்தை இழந்துவிட்டோம், இனி அடுத்த குறி வடக்கு.
இப்பொழுதுகூட தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களில் கிழக்கு என்பது தென்னிலங்கையால் அரசியல்வாதிகளால் சேர்க்கப்படுவதிலை. வடக்குத் தமிழர் என்று சொல்லும் வழக்கம் தான் இருக்கின்றது. இந்த நிலை ஏன்? கிழக்கு எங்கே போய்விட்டது? காரணம் ஒன்றுதான், அவ்வளவுக்கு தமிழர் தாயக நிலத்தைச் சுருக்கிவிட்டார்கள். வடக்கையும் சுருக்குவதற்குத்தான் முழு ஏற்பாடுகளும் தற்பொழுது நடந்துகொண்டிருக்கின்றன.
இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சு எழும்போது கிழக்கிலுள்ள சில தமிழர்கள் வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக பேசிவருவது வேதனையளிக்கிறது. வடகிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணிகளின் மேலாதிக்கம் மேலோங்கும் என்கிறார்கள். என்ன காரணத்துக்காக இதனைச் சொல்கிறார்கள்? வேண்டுமென்றே சொல்கிறார்களா? விளங்காமல் சொல்கிரார்களா? அல்லது விஷமத்துக்குச் சொல்கிறார்களா?
கிழக்கிலே சிறுபான்மைப்பட்டுப்போன எமது மக்களை பலமிக்க சக்தியாக மாற்றவேண்டுமாயின் வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே தாயகப்பிரதேசமாக மாறவேண்டும். வட மாகாணத்தின் தலை நகரம் யாழ்ப்பாணம் என்ற நிலை மாறி வடகிழக்கு மாகாணத்தின் தலை நகரம் திருகோணமலையாக மாறவேண்டும்.
ஈழம் என்பது என்றைக்கும் சுருங்கத்தக்க சொல்லாக மாறக்கூடாது. ஹம்பாந்தோட்டையும் எங்களதுதான், காலியும் எங்களதுதான், கண்டியும் எங்களதுதான், மொனராகலையும் எங்களதுதான், யாழ்ப்பானமும் எங்களதுதான். எங்கள் மூதாதையர்கள் உருண்டு புரண்ட மண்கள் அவை. முழுத் தீவுக்கும் உரிய எமது பன்னெடும் வரலாற்று நீட்சி கொண்ட ஈழம் என்ற சொல் தனியே வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்துக்கு உரித்தான பெயர் அல்ல. ஈழத்தை நாம் எமக்கு மட்டுமே எடுத்துக்கொள்வோமானால், கதிர்காமத்தில் இருந்த எமது பழங்குடிகளின் குடியிருப்புக்களையும் மலை நாட்டில் இருந்த இராவணேசனின் சாம்ராஜ்ஜியத்தையும் சிங்களவருக்கே கருத்தியல் ரீதியிலும் தாரைவார்த்துக் கொடுத்தவர்களாகிவிடுவோம்.
தாராளமாகச் சொல்லுங்கள் ஈழம் என்பதும் இலங்கை என்பதும் இந்தத் தீவுக்குரிய தூய தமிழ்ச் சொற்கள் என்று!