தமிழர்களுக்கு பேரிடி! ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம்?

இலங்கையில் நடந்த தமிழர்களின் போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டத்தின் முடிவில் இலங்கை அரசு செய்த முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றியும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

downloadஐ.நா. சபையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக விடுதலை வேண்டி இன்னமும் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், இன்று வரை தமிழர்களுக்கான நீதியும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது.

சிங்கள இராணுவத்தினரின் பிடியில் தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சிங்களவர்கள் மட்டுமே வாழும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று பிற நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகிறது.

அதன் முக்கியச் சாராம்சம் தான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘இலங்கையின் புதிய அரசியல் யாப்பு’.

‘ஒருமித்த தேசம்’ என்று உருவாக்குவது தான், அதாவது ‘ஒரே நாடு ஒரே இனம்’ என்ற கொள்கை தான் புதிய அரசியல் யாப்பின் நோக்கம்.

இன்னும் சொல்லப்போனால், இன அழிப்பைச் சட்ட பூர்வமாக்கி, மிச்சமிருக்கும் தமிழர்களையும் காவு வாங்கும் திட்டம் தான் இந்தப் புதிய அரசியல் யாப்பு.

அதாவது, இனி அங்கு தமிழர்கள், சிங்களவர்கள் என்ற இரு இனங்கள் கிடையாது. ஒட்டுமொத்தமாகச் சிங்களவர்கள் மட்டுமே.

இந்த யாப்பின் முக்கியச் சாராம்சம் தமிழர்களின் நிலங்களைச் சிங்கள அரசு எந்தவித காரணமும் இல்லாமல் இராணுவ விவகாரங்களுக்காகக் கையகப்படுத்திக் கொள்ளலாம்.

இனி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பை யோசிக்கக் கூடாது. அனைத்து மக்களையும் ஒரே மதத்தின் கீழ், ஒரே தேசத்தின் கீழ் கொண்டு வருவது.

இலங்கை அரசின் இந்தப் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கடந்த 18-11-2017 அன்று மேற்கு மாம்பலத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், பேராசிரியர் ஜெயராமன், இயக்குநர் கௌதமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ‘அறிவாயுதம் – தமிழ்த் தேசிய ஆய்விதழ்’ ஏற்பாடு செய்திருந்தது.

கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வைகோ, ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்த யாப்பு கண்டிக்கத்தக்கது.

இந்த அரசியல் சட்ட யாப்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் உள்ளேயே கொளுத்தப்பட வேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதையே சிங்களவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

‘ஒரே மதம்… ஒரே மொழி’ என்ற இந்தச் சட்டம், தமிழர்களை அழித்து விடும். இந்த யாப்புக்கு இந்திய அரசு துணை நிற்கிறது.

இந்திய அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியை விடத் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோடியின் அரசு தமிழர்கள் அனைவரையும் காவு வாங்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய தேசியம் என்று ஒன்று கிடையாது. பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு அவ்வளவு தான். அது, எப்போது வேண்டுமானாலும் பிரியும்” என்று பொங்கினார்.

உ.தனியரசு, ”ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக அவ்வளவு அழுத்தம் கொடுத்த போதும் இன்று வரை ஒரு சதவிகித நியாயம் கூட கிடைக்கவில்லை.

தமிழீழத்தைப் பொறுத்தவரையில் உலகில் ஒரு நாடுகளும் நம்மை ஆதரிக்கவில்லை. தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும்.

அப்போதுதான், அனைத்துத் தமிழர் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தற்போது இலங்கையின் இந்த யாப்புக்காக எதிர்த்து நிற்போம். அனைவரும் போராடுவோம்” என்றார்.

 

  • இதன்போது கருத்து வெளியிட்ட கௌதமன்,

 

இந்த யாப்பு தமிழர்களுக்கான உரிமையை முற்றிலும் பறித்து விடும். உலக அரசியலில் தந்திரமாக அனைத்து நாடுகளையும் ஏமாற்றும் வகையிலே இந்த யாப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் நில உரிமையைக் கையகப்படுத்துதலையும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணையக் கூடாது என்பதையும் இந்த யாப்பு அழுத்தமாகச் சொல்கிறது.

அதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிந்து கிடக்கும் தமிழர்கள் மீண்டும் இணைந்து விட்டால், தங்களின் உரிமைக்காக மீண்டும் போராடுவார்கள்.

அதனால்தான் இலங்கை அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்று சேர்வதைத் தடுத்து வருகிறது.

படுகொலை செய்தவர் ராஜபக்‌ச என்றால், அந்தப் படுகொலையும், தமிழர்கள் மீதான உரிமை மறுப்பையும் மூடி மறைப்பது சிறிசேன.

அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனும், சுமந்தனும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக அவர்கள் சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளார்கள். அவர்களைத் தமிழர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தமிழர்களையும், தமிழ் நிலங்களையும் காப்பாற்றும் உரிமை நமக்கு இருக்கிறது என்றார்.

 

  • ஜெயராமன் பேசும் போது,

 

”சிங்கள இனம் ‘ஒருமித்த தேசம்’ என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறது. அந்தத் தீவில் பௌத்த மதமும், சிங்கள மொழியும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இன்னொரு தேசிய இனமான தமிழர்கள் அங்கு வாழக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனித உரிமை மீறல், இன அழிப்பைப் பற்றி உலக நாடுகளின் வாயை அடைப்பதற்கு இந்த யாப்பை முன்னெடுக்கிறார்கள்.

இந்த யாப்புக்கு வழிகாட்டி இந்தியா தான். இந்திய அரசு, இலங்கையில் இருக்கும் தமிழர்களும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களும் நன்றாக வாழக்கூடாது என்று நினைக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தில் ஆறு, மணல், கனிம வளம் போன்ற இயற்கை வளங்கள் எதுவுமே இருக்காது.

தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுடுவதற்குத் தாமதமானால், இந்தியப் படையே தமிழக மீனவர்களைச் சுடும்” என்றார்.

 

  • பெ.மணியரசன் பேசும் போது,

 

”முதலை வேண்டுமானால், மனிதர்கள் மீது கருணை காட்டலாம். ஆனால், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்கள் மீது கருணை காட்டமாட்டார்கள்.

இந்திய அரசும் அதுபோலத்தான் தமிழர்களைச் செய்து வருகிறது.

பல இனங்கள் இருக்கும் நாட்டில் நாடாளுமன்றம் என்பது ‘ஒடுக்குமுறை கிரீடம்’ அவ்வளவு தான். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம். தமிழர்களை நம்புங்கள்,

ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற வேண்டி எண்ணற்ற பேர் இங்கு தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

தமிழர்கள் எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடியும், குரல் கொடுத்தும் வருவார்கள்” என்றார் நம்பிக்கையுடன்.

 

  • கருத்து வெளியிட்ட கவிஞர் காசி ஆனந்தன்,

 

பழைய இலங்கை அரசியலமைப்பையும், புதிய அரசியலமைப்பையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த அரசியலமைப்பைப் பற்றி, தந்தை செல்வாவின் காலத்திலேயே எங்களுக்குத் தெரியும்” என்றார்.

 

  • அவரை தொடர்ந்து உரையாற்றிய வேல்முருகன்,

 

எங்கள் தமிழர்களுக்கென்று தனிநாடு பிறக்காதா என்ற ஏக்கம் இங்குள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கிறது.

எப்படிச் சிங்களவர்களால் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு அளவில்லையோ… அதுபோலத்தான் இந்திய அரசால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் இன்னல்களுக்கும் அளவில்லை.

எங்கள் வாழ்வுரிமை அழிந்து வருகிறது. நாட்டின் ஆட்சியாளர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, பல அரசு உயர் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் இந்தியர்கள் மட்டுமல்ல…

இனி வரும் காலங்களில் வெளிநாட்டினரும் வருவார்கள். அதற்கான வேலையைத்தான் இந்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. நம்மைச் சுற்றி என்ன பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்பதையே என் தமிழ்ச் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது.

‘அறம்’ படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டே என் தமிழ்ச் சமூகமே, மக்களுக்காக…

நமது உரிமைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் பெ.மணியரசன், வைகோ மற்றும் பல போராளிகளை ஞாபகம் வைத்துக் கொள்ளாதது ஏன்?

மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத முதலமைச்சர்களையும், அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்.

யாரை எங்கே வைப்பது என்று தெரியாத ஓர் ஆட்டு மந்தை கூட்டமாகத்தான் என் தமிழ்ச் சமூகம் இருந்து வருகிறது.

அதனால், இந்தக் கூட்டத்துக்குப் பல பிரச்சினைகளை மத்திய அரசு தந்து கொண்டிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.