போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதா இருந்தவரை, தமிழகத்தின் அதிகார மையம். அ.தி.மு.கவினரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இரும்புக் கோட்டை. சசிகலா அந்த வீட்டில் இருந்தவரைக்கும்கூட அதுதான் நிலைமை.
ஆனால், இன்று வாழ்ந்து கெட்டவர்கள் வீடு என்பதற்கு கண்முன் சாட்சியாக நிற்கிறது போயஸ் கார்டன். அதன் தேஜஸில் சாம்பல் படியத் தொடங்கிவிட்டது.
இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அது தங்களுக்குச் சொந்தம் என்கின்றனர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா-தீபக்.
அரசாங்கம் அந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் சசிகலாவின் உடமைகளும் அந்த வீட்டில் இருக்கின்றன.
அரசாங்கத்தின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் தீபா. இனி போயஸ் கார்டன் வீடு என்னதான் ஆகும்.
மன்னார்குடி குடும்பத்துக்கு இல்லை!
போயஸ் கார்டன் வீட்டின் உரிமையில் சசிகலா குடும்பத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அந்த வீட்டில் ஜெயலலிதாவால் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அதனால், சசிகலா, இளவரசி, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் முகவரியாக போயஸ் கார்டன், வேதா நிலையத்தின் விலாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதனால் மட்டும் அவர்கள் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் கடைசி மகன் சுதாகரனை (தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்தவர்) வளர்ப்பு மகனாக தத்தெடுத்து இருந்தார்.
ஆனால், அதனாலும் அந்த வீடு சுகதாகரனுக்கோ, அல்லது சசிகலா குடும்பத்தில் வேறு யாருக்கோ சொந்தமாகாது. ஏனென்றால், இந்து வாரிசுரிமைச் சட்டமும், தத்தெடுக்கும் நிபந்தனைச் சட்டமும் அப்படித்தான் இருக்கிறது.
வி.என்.சுதாகரன் வாரிசா?
பொதுவாக ஒரு பெண் (ஆணுக்கு இது பொருந்தாது) இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்களுக்கு அவருடைய பிள்ளைகள் மற்றும் கணவர் வாரிசு ஆவார்கள்.
அவர்கள் இல்லாதபோது, பெண்ணின் பெற்றோருக்கு அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, அவருக்கு பெற்றோர் உயிருடன் இல்லை. திருமணம் ஆகவில்லை. குழந்தைகள் இல்லை.
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை. ஆனால், 1995-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை, தனது வளர்ப்பு மகன் என்று அறிவித்தார்.
அவரை ஜெயலலிதா வளர்ப்பு மகன் என்றுதான் அறிவித்தாரே தவிர, சுதாகரனை தத்தெடுக்கவில்லை. ஏனென்றால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, ஒரு குழந்தையை ஒரு பெண் தத்தெடுப்பதற்கு பல நிபந்தனைகள் உள்ளன.
தத்தெடுக்க சட்டம் விதிக்கும் நிபந்தனைகள்…
இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, திருமணம் ஆகாத அல்லது விவாகரத்தான பெண்ணும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். குழந்தையை தத்துக் கொடுப்பவர், குழந்தையை தத்தெடுப்பவர் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுக்கும் போது, அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைக்குமான வயது வித்தியாசம் குறைந்தது 21-வயதாக இருக்க வேண்டும்.
தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு 15 வயது நிரம்பி இருக்கக்கூடாது. தத்தெடுப்பு என்பது இந்துமத முறைப்படியான சடங்குகளைப் பின்பற்றியோ அல்லது பதிவு செய்த தத்தெடுப்பு ஆவணம் மூலமாகவோ நடக்கலாம்.
இந்த சட்ட அடிப்படையில் பார்த்தால், வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாக ஆக முடியாது. அதனால்தான், ஜெயலலிதாவே சுதாகரனை வளர்ப்பு மகன் என்று அறிவித்தார்.
அதனால், சுதாகரன் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு கிடையாது. அவர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோரவும் முடியாது.
(அதன்பிறகு, 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த பிறகு, சுதாகரனை ஜெயலலிதாவீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். சுதாகரன் தன்னுடைய வளர்ப்பு மகன் இல்லை என்றும் பின்னாளில் அறிவித்தார்.)
ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும்?
இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும்.
மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.
ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும்.
ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும்.
அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும்.
மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும்.
ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது.
அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா உரிமைகோர முடியும்.
ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும்.
தீபக், தீபாவுக்கு சொத்துக்கள் போகுமா?
ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. உயிலைப் பொறுத்து, அதைப் பதிவு செய்ய வேண்டியது என்பது கட்டாயம் இல்லை.
பதிவு செய்யாத உயிலாக இருந்தாலும் அது செல்லும். அந்த உயில் குறித்து, சம்பந்தப்பட்டர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டு இருந்தால், அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ・புரபேட்・செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்திற்கு,, ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் புரபேட் செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான் அந்த உயில் குறித்து நமக்குத் தெரியவரும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவரும்.
ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துக்களை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் செல்லும் தன்மை குறித்தும், புரபேட் வழங்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும்.
தமிழகத்தில் சென்னை தவிர்த்து, வேறு ஊர்களில் ஜெயலலிதாவுக்கு சொத்து இருந்தால், அது சம்பந்தமாக அவர் உயில் எழுதி இருந்தால், அதை புரபேட் செய்யத் தேவை இல்லை. ஆனால், அந்த உயில் சென்னையில் எழுதப்பட்டு இருக்குமானால், மேலே சொன்ன புரபேட் நடவடிக்கைகள் பொருந்தும்.
போயஸ் கார்டன் வீடு யாருக்கு?
ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள், எஸ்டேட்டுகள், சொத்துக்கள் வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றுக்கு ஜெயலலிதாவே உயிரோடு இருந்தால்கூட உரிமை கொண்டாட முடியாது. ஆனால், போயஸ் கார்டன் வேதா நிலையத்தைப் பொறுத்தவரை அந்தக் குழப்பமே கிடையாது. அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது.
அந்த இடம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியது. ஆனால், அது ஜெயலலிதாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வந்த தொகையில்தான் வேதா நிலையம் வீடு கட்டப்பட்டது.
அதன்பிறகு அதில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் எல்லாமும் சேர்த்து ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது.
இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும்.
மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.
ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும்.
ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும்.
அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும்.
அந்தவகையில் தற்போது போயஸ் கார்டன் வீட்டில் தீபா, தீபக் இருவருக்கும் பங்கு உண்டு. ஆனால் அதே சமயம், மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும்.
ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.
சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா உரிமைகோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும்.
அரசு கையகப்படுத்தினால்…
போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி ஒரு தனியார் சொத்தை பொது நோக்கத்துக்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டுமானால், அதுபற்றி யாரிடமும் கேட்கத் தேவையில்லை.
ஆனால், அந்தச் சொத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. தற்போது போயஸ் கார்டன் வீட்டை அரசாங்கம் கையகப்படுத்தியதை எதிர்த்து, ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் தீர்ப்பு வரும்வரை, போயஸ் கார்டன் வீடு யாருக்கு என்பதில் சிக்கலே நீடிக்கும். ஒருவேளை நீதிமன்றம், ‘போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் வாரிசுகளுக்குச் சொந்தம் என்றோ… அல்லது அதற்கான இழப்பீட்டை அவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்” என்றோ தீர்ப்பளித்தால், அது தீபா-தீபக்குக்கே செல்லும்.