வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன் புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்று இரவு 8.30 மணியளவில் புதிய கற்பகபுரம் கிராமத்தினுள் வாள்களுடன் புகுந்த இளைஞர் குழு ஒன்று அங்கிருந்த இளைஞர்கள் மீது கண் மூடிதனமான தாக்குதலை மேற்கொண்டதுடன் வாள் வீச்சிலும் ஈடுபட்டதுடன் நிரோசன் (30) என்ற இளைஞனை (எ.எ.இ 5668) என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றதுடன் இவர்களை பின் தொடர்ந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து மடக்கி பிடித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் காயப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயப்பட்ட இளைஞன் தன்னை வண்டியில் கடத்தி செல்லும்போது செருப்பாலும் வாளினாலும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து தாக்கியதாக தெரிவித்தார்.
எனினும் இச்சம்பவத்திற்குரிய காரணம் இதுவரையில் அறியப்படாத போதும் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவினர் ஏற்கனவே இந்த பகுதிகளில் வாள்வீச்சில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட வாள்வீச்சு சம்பவத்தையடுத்து, அக்கிராமத்தின் ஸ்தாபகரும் சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான ப.உதயராசா சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் உடனடியாக பொலிஸாருக்கும் உயரதிகாரிகளும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலமைகளை கேட்டறிந்ததுடன் காயபட்ட நபரை வவுனியா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.