உலக அழகிப் பட்டம் வென்றிருக்கும் மானுஷி சில்லர், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சீனா கிளம்பும்போதே வெற்றி மகுடம் சூடிவருவேன் என நம்பிக்கையுடன் சென்றதாக சொல்கிறார் மானுஷியின் தாய்வழி தாத்தா.
“பேத்தியின் உழைப்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். சீனா கிளம்புவதற்கு முன்பே, வெற்றிக் கிரீடத்துடன் திரும்பிவருவேன் என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு சென்றாள் என் பேத்தி மானுஷி சில்லர்” என்று குதூகலிக்கிறார் பிபிசி செய்தியாளரிடம் பேசிய மானுஷியின் தாத்தா சந்த்ர சிங் ஷெராவத்.
மானுஷி ‘மிஸ் வோர்ல்ட்’ பட்டம் வெற்ற சில மணி நேரங்களிலேயே ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வசிக்கும் மானுஷியின் தாத்தா ஷெராவத்தை பிபிசி நிருபர் தொடர்புகொண்டு பேசினார்.
“மகளை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காக என் மருமகனும் சீனாவுக்கு சென்றிருக்கிறார்” என்று சொன்ன ஷெராவத், உலக அழகி பட்டம் வென்ற தனது பேத்தியுடனும், மகள் மற்றும் மருமகனிடமும் தொலைபேசியில் பேசி, மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டதாக சொன்னார்.
தனது மூன்று பேரக்குழந்தைகளில் ஒருவரான மானுஷியின் சிறப்புகளை பட்டியலிடுகிறார் அன்பான தாத்தா.
“அலங்காரமோ, படிப்போ, விளையாட்டோ, எந்த வேலையை செய்தாலும் முழு கவனத்துடனுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுவது என் பேத்தியின் குணம். படிப்பிலும் எப்போதும் முதலிடத்தை பிடிப்பாள் மானுஷி. அதேபோல் மாடலிங்கிலும் முதலிடம். எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்யும் குணம் அவளுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றே நினைக்கிறேன்.
மருத்துவ பட்டப்படிப்பில் இரண்டாவது ஆண்டு படிக்கும் மானுஷி, இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மிஸ் இண்டியா போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்று, இப்போது உலக அழகி என்ற மகுடத்துடன் வெற்றிவாகை சூடி நிற்கிறார்” என்கிறார் ஷெராவத்.
விளையாட்டிலும் ஆர்வம் உள்ள மானுஷி, ஆழ்கடல் நீச்சல் பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கிறார்.
மிஸ் இண்டியா பட்டம் வென்றதுமே ‘மிஸ் வேர்ல்டு’ போட்டிக்காக தயாராகத் தொடங்கிய மானுஷி சில்லர், போட்டியில் கலந்து கொள்வதற்காக 25 நாட்களுக்கு முன்னரே சீனா சென்றுவிட்டதாக தெரிவித்தார் சந்த்ர சிங் ஷெராவத்.
மானுஷியின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறும் ஷெராவத், “எங்கள் மனதில் சிறு குழந்தையாக தோன்றும் மானுஷி உலக அழகியாக பட்டத்தை வென்று ஒட்டுமொத்த குடும்பத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறார்”.
அம்மாதான் என்னுடைய மிகப்பெரிய உத்வேகம், அம்மாவாக இருப்பதே சிறந்த பணி” என உலக அழகிப் போட்டியின் கடைசி கேள்வியில் பதிலளித்த பேத்தியின் அன்பை மெச்சுகிறார் தாத்தா.
“உலகின் மிகப்பெரிய தளத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் பேத்தியின் தாத்தா என்று சொல்லிக் கொள்வதில் கர்வப்படுகிறேன்” என்கிறார்.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர் மானுஷி. ஹரியாணாவை சேர்ந்த சாக்ஷி மலிக் ஒலிம்பிக் பட்டத்தை வென்றார்.
ஹரியாணாவில் பெண்களின் நிலைமை மாறுவதற்கு இதுபோன்ற பெண்களின் வெற்றி உதவுமா?
இதற்கு சந்த்ர சிங் ஷெராவத்தின் பதில் என்ன? “தற்போது இங்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருவதை நான் நேரடியாக பார்க்கிறேன். பெண்கள் மிகப்பெரிய உச்சத்தை தொடும் திறன் படைத்தவர்கள்.”
ஹரியாணா மாநிலம் முழுவதுமே மானுஷியின் வெற்றியை கொண்டாடுகிறது. இதேபோல் பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து, அவர்களின் வெற்றியும் கொண்டாடப்படும் என்று நம்புகிறோம்.