கென்யாவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட மீள் தேர்தல் செல்லுபடியாகும் என அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் கென்யாவின் பல்வேறு பகுதிகளில் புதிய பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த தேர்தலில் உருஹு கென்யாட்டா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
எந்தவொரு தவறும் இல்லாமல் முறையாக தேர்தலை நடத்த முடியாது எனக் குறிப்பிட்ட சட்டமா அதிபர், முடிவுகளை பாதிக்காத வரை தேர்தலை செல்லுபடி அற்றது என கூற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆச்சரியப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் ரைய்லா ஒடிங்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து, கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலை எதிர்கட்சித் தலைவர் ரைய்லா ஒடிங்கா பகிஷ்கரித்திருந்தார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவு செல்லுபடிஅற்றது என கென்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.