கடற்படை மீனவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல்?

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றுக் காலை(20) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamilnadu-fishermenஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்றுக் காலை 155 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

அதில் TN06 MM 022 என்ற படகில் சென்ற சத்தியராஜ், கண்ணையன், அருண்குமார், அன்பரசன், பாலமுருகன், சௌந்தர்ராஜன் ஆகிய 6 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை கடற்படை குறித்த மீனவர்களின்  வலைகளை அறுத்து, வாக்கி டோக்கி உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றியதுடன், 4 மீனவர்களை கட்டிப் போட்டு கிரிக்கெட் மட்டையை கொண்டு தாக்கியுள்ளதாக அறியமுடிகிறது.

இதில் காயமடைந்த அருண்குமார், அன்பரசன், கண்ணையன், சௌந்தர்ராஜன் ஆகியோரை மீட்ட சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காயமடைந்த மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.