ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அண்மையிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பை அண்மித்த பத்தரமுல்ல – கொஸ்வத்த பகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நிகழ்வொன்று நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகைதர முன்னர் வழமைபோன்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நிகழ்வு நடைபெறுகின்ற இடத்தை அண்மித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது துப்பாக்கித் தோட்டாக்கள் 20, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ரிவோல்டர், இரண்டு கஜமுத்துக்கள், வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்கள் 4 என்பவற்றை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் பத்தரமுல்ல – தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளுக்கு அண்மையிலும், நிகழ்வுகளிலும் ஆயுதங்களுடன் நடமாடிய நபர்களும், அண்மித்த பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்பு செயற்பாடுகளும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.