மதுரை கீழமாசி சித்திரை வீதியில் பருப்பு கடை வைத்துள்ளார் சரவணன் இவரது வீடு தல்லாகுளத்தை அடுத்த வள்ளுவர்காலனியில் உள்ளது. வீட்டில் அவர் மனைவி சித்ரா (45) தனியாக இருக்கும்போது வீட்டுக்கு முன் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த ராஜேந்திர குரூஸ் என்ற ராமு என்பவரும் ராஜேந்திரன் என்பவரும் சித்ராவிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீரை செம்பில் கொண்டு போய் கொடுக்கும்போது தண்ணீரைத் தட்டிவிட்டு கழுத்தை நெரித்த பின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையையும் பீரோவில் இருந்த 10 சவரன் நகையையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பெயின்ட் அடிக்க வந்த நபர்கள் நகையைத் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் இலங்கை திரிகோணமலையைச் சார்ந்தவர்கள் என்றும் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவருவதாகவும் தகவல் கிடைத்தன.
மேலும், இதேபோல் சிவகங்கை ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெளசுதீன் மனைவி ஜமீன்பாத்திமா (29) மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது அவரது கேன்ட் பேக்கை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அவரது பையில் 8 சவரன் நகையும் ஒரு ஸ்மார்ட் போனும், 12,000 பணம் இருந்ததாகப் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் விசாரணை செய்துவருகிறது.