ஃபேஷன் ஷோவில் கலக்கிய நித்யா தேஜு!

பெண் தொழில்முனைவோர் ஆண்களைப் போலவே நேரம் காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள். நவம்பர் 19-ம் தேதி பெண்  பெண் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் நம்மை அதிகமாகக் கவர்ந்தார். அவர், கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்த நித்யா. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி. அழு மூஞ்சியுடன் காட்சியளிக்கும் அவர் இப்போது ஆளே மாறியிருந்தார்.

“அழு மூஞ்சு நித்யாவா. நா தேஜு” என முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்தார் நித்யா, sry sry தேஜு. தோற்றம் மட்டுமல்ல, அவருடன் பேசியதில், ‛இந்தப் பொண்ணுக்குள்ள இவ்ளோ திறமை ஒளிஞ்சிருக்கா’ன்னு ஒரே ஆச்சர்யம். நித்யாவுடன் இணைந்து 25 தொழில்முனைவோர்கள் அந்த ஃபேஷன் ஷோவில் பங்குபெற்றனர். தங்களின் தனித்தன்மையை உலகறியச் செய்தவர்களின் மறுபக்கம் கலர்ஃபுல் டைரி.

நித்யா - தாடி பாலாஜி மனைவி
எத்னிக் (ethnic), இண்டோ வெஸ்டர்ன் (indo -western) மற்றும் வெஸ்டர்ன் (western) என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு தொழிலதிபர்கள் அனைவரும் தேவதைபோல் மேடையில் தோன்றினர். வண்ண வண்ண ஆடைகள், மிளிரும் ஆபரணங்கள், விதவிதமான சிகை அலங்காரமென மேடை களைகட்டியது. பல பட்டாம்பூச்சிகளுக்கு இடையே ஒரு ‘தேஜஸ்’. நீல நிற உடை, ரம்மியமான புன்னகை, தன்னம்பிக்கையான பார்வையுடன் ராம்ப் வாக்’கிட்டார் தேஜு எனும் நித்யா.

Dheju2_16478பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்த தேஜுவிடம் சில நொடி கலந்துரையாடலில், “ரொம்ப நாளா கணவர், குழந்தைனு சாதாரணக் குடும்ப பொண்ணாவே வாழ்ந்துட்டேன். சமூக சேவையில் அதிக ஆர்வம் இருந்ததால NGO ஆரம்பிக்கலாம்னு ஐடியா. அப்படி ஆரம்பிச்சதுதான் ‘WE – Women Endeavor ‘ அமைப்பு. இது முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான அரசு சாரா அமைப்பு. அதுமட்டுமில்ல ‘தி பீ ஸ்கூல் (The Bee School) எனும் குழந்தைகள் விளையாட்டு பாடசாலை, ‘கேட்ச் என்டெர்டெய்னர்ஸ் (Catch Entertainers) எனும் நிகழ்ச்சி மேலாண்மை அமைப்பும் தொடங்கியிருக்கேன். சமூக ஆர்வலரான எனக்கு முற்றிலும் பக்கபலமாக இருப்பது என் தந்தை. சமீபத்தில் கசிந்த என் மணவாழ்வின் கசப்பான பக்கங்கள்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், என்னுள் இருக்கும் மறுபக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த Wei – Fa அமைப்புக்கு நன்றி. என் மகள் போஷிகாவுடன் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. ‘சிங்கிள் மாம் (Single Mom)’ என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறியவர் ‘ஸ்மைலிங் ஃபோட்டோ போடுங்க ப்ளீஸ்’ எனப் புன்னகைத்தார்.

 

வருங்காலத் திட்டம் குறித்து கேட்டபோது, “எல்லா வகையான வசதிகளோடு சூப்பரான முதியோர் இல்லம் கட்ட வேண்டும் என்பதே என் நீண்டநாள் ஆசை. அதுமட்டுமில்ல, உள்நாட்டு வன்முறையை எதிர்த்து ‘பெண்கள் மாரத்தான்’ போட்டிக்கான வேலை நடந்திட்டிருக்கு. நான் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் உங்க ஆதரவும் அன்பும் என்னிக்குமே வேணும்” என்று படபடவென பறந்துவிட்டார்.

பல இன்னல்களுக்குப் பின், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கும் தொழிலதிபர் தேஜுவுக்கு வாழ்த்துகள்!