முஸ்லிம் மதத் தலைவர்கள் தங்களது இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடின் பௌத்த மதத் தலைவர்களாகிய எங்களால் சிங்கள இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். நீங்கள் நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்.
இன்றேல் நிலைமைகள் மோசமடைவதை தவிர்க்க முடியாது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து பிரதேசத்தில் சுமுக நிலையைத் தோற்றுவிக்கும் பொருட்டு அரசியல், மத மற்றும் சிவில் சமூக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், கிந்தோட்டை வன்முறைகளைப் பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்திகளே காரணமாகும்.
இன்று கத்திகளையும் வாள்களையும் விட நாம் கைகளில் வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகள்தான் பெரும் ஆயுதங்களாக மாறியுள்ளன.
இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்ட வதந்திகளும் தவறான தகவல்களுமே அளுத்கமவிலும் ஒரு கலவரம் வெடிக்கக் காரணமாக அமைந்துள்ளது. அதுவே இன்று கிந்தோட்டையிலும் நடந்துள்ளது.
கிந்தோட்டை சம்பவத்தைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களைக் கட்டுப்படுத்த நாம் தயார். ஆனால் அதற்கு முன்பாக முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அந்தக் கடமையை முஸ்லிம் மதத் தலைவர்கள் செய்ய வேண்டும்.
கிந்தோட்டையில் வன்முறைகள் இடம்பெற்ற அன்றிரவே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இப் பகுதிக்குள் பிரவேசித்தமையை நாம் கண்டிக்கிறோம்.
இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கிந்தோட்டைக்குள் வந்ததால் சிங்கள மக்கள் அச்சமடைந்தனர்.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எவரும் காலி மாவட்டத்துக்குள் வர வேண்டிய அவசியம் கிடையாது. அதனை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்ளக் கூடாது.
அதேபோன்று இச் சம்பவங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதை நாம் விரும்பவில்லை.
அவ்வாறு நீடிப்பது இங்குள்ள மக்களை தொடர்ந்தும் பதற்ற நிலையில் வைத்திருக்கவே வழிவகுக்கும். எனவே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம் என்றும் ஞானசார தேரர் இக் கூட்டத்தில் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் ஞானசார தேரர் அப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் வீடுகளுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த அவர் பௌத்த விகாரையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
ஞானசார தேரரின் வருகையைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றது.
எனினும் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.