மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இரட்டை வாக்குரிமை சட்டத்தால் தன் பதவியை இழந்துள்ளார். இதே காரணத்துக்காக பதவியை இழக்கும் ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர்.
நிக் செனொஃபோன் டீம் எனும் சிறிய கட்சியயைச் சேர்ந்த, செனட் அவை உறுப்பினர் ஸ்கை கக்கோஸ்கி – மூர், “சிங்கப்பூரில் பிறந்த என் அம்மாவின் மூலம், எனக்கு பிரிட்டன் குடியுரிமையும் வந்ததை அறிந்து, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியின் அரசியல்வாதிகள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்துள்ளது.
இதனால் இதுவரை எட்டு பேர் தங்களது பதவியை இழந்துள்ளார்கள். இது ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பாதிக்கிறது.
கடந்த வாரம் பிரிட்டனின் உள்துறையிடம் இருந்து வியப்பூட்டும் அறிவுரை வந்ததை அடுத்து அவர் தமது குடியுரிமை விவரங்களை சரிபார்த்ததாகக் கூறுகிறார்.
மூர்,”நான் பிரிட்டனுக்கு குடியுரிமைக்கு தகுதியற்றவள். இது என் புரிதல். என் குடும்பத்தின் புரிதல்.”
கடந்த மாதம் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு விளக்கமளித்ததுடன், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை பறித்தது. மூர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் தங்களே பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணச் சொல்லி பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்கு அனைத்து உறுப்பினர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில், அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது குடியுரிமைந் நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என்றார்.
டிசம்பர் 5 க்குள் இந்த அறிவிப்பை செய்யவேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
டர்ன்புல்லுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு நபர் பெரும்பான்மையே உள்ளது. இவர் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால் டிசம்பர் மாதத்துக்குள் பதவியை இழந்த அவரது கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைத் தேர்தலில் வெல்லவேண்டும்.