கன்னியாகுமரி மோசடி நிதி நிறுவன மோசடி..! 250 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகிலுள்ள மத்தம்பாலை, பளுகல் பகுதிகளில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் நடத்திய நிர்மலன் பணம் மோசடி செய்து தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நிர்மலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என மனு செய்தனர்.

நிர்மலனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் நாகர்கோவில் கொண்டு வரப்பட்ட நிர்மலனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. நேற்று பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி லலிதா லட்சுமி நாகர்கோவிலில் நிர்மலனிடம் விசாரணை நடத்தினார். அவர் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.

நிர்மலனுக்கு எந்தந்த வங்கிகளில் அக்கவுண்ட் உள்ளது. அதில் நடத்தப்பட்ட பண பரிவர்த்தனை பற்றி விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தற்போது நிர்மலனின் 250 கோடி மதிப்பிலான சொத்துளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். மேலும் நிர்மலனிடம் இருந்து சொத்துக்களை யார் வாங்கினர்கள் என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட உள்ளது.