கமலை ட்விட்டரில் சாடிய தமிழிசை..!

‘கம்பெனி ப்ரொடக்ஷன்’ -இன் மேனேஜரும் நடிகர் சசிக்குமாரின் உறவினருமான அசோக்குமாரின் தற்கொலை திரைப்படத்துறையை தாண்டி பொதுமக்களிடையேயும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு மரணம் நிகழும்போது அங்கே புரட்சி உண்டாகும். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி வெடித்திருக்கிறது” என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். விஷால் மட்டுமில்லாமல், சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அசோக்குமாரின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது ரஜினியும் கமலும் இன்னும் எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால், இவர்கள் இருவரும் எப்போது எப்போது வாய்திறப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழிசை

இதனிடையே தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தனது ட்விட்டரில் அசோக்குமாரின் தற்கொலைக்கு கருத்து தெரிவிப்பது போல மறைமுகமாக கமலை சாடியிருக்கிறார்.

தமிழிசை ட்விட்டர் பக்கம்

“தன்துறை சார்ந்த துக்கம் தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான்வேண்டும்! என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழிசையின் இந்த ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர் கமலை மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே விமர்சிக்கிறார்”, “இப்போ உங்களோட ட்வீட்டை படிக்குறதுக்கு கோனார் உரை தேவைப்படுது மேடம்”, “கமலுக்குப் போட்டியா ட்வீட் போடுறாராம்”, “மருந்து சீட்டு எழுதுற மாதிரி சேர்த்தே எழுதாதீங்க முடியல” என்றும் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.