“போர்த்திக்கொள்ளவும், போட்டுக்கொள்ளவும் துணி கிடைக்காதபோது, ‘அந்த நாட்களில்’ பயன்படுத்த துணி எங்கிருந்து கிடைக்கும்?” இது சாலையோரங்களில் வசிக்கும் பெண்களில் ஒருவரான ரேகா என்ற பெண்ணின் நிலை.
அவர் சொல்லும் அந்த நாள் என்பது ‘மாதவிடாய் நாட்கள்’
ரேகா சொல்கிறார், “மாதவிடாயை எப்படி தவிர்க்கமுடியும்? பெண்ணாக பிறந்த அனைவரும் அனுபவிக்கவேண்டிய தொடர் நிகழ்வு. ஆனால் அந்த நாட்கள் மிகவும் கொடுமையானவை, சமாளிப்பது மிகவும் சிரமம், கிழிந்துபோன துணிகள், காகிதங்கள், பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துவோம்.”
ரேகாவும், இன்னும் சில பெண்களும் அங்குதான் வசிக்கிறார்கள். சாலையோரத்தில் வசிக்கும் அவர்கள், அங்கேயே செங்கல்களை கூட்டி, சமைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் சாலைகளில் கிடக்கும் குச்சிகளையும், மரத்துண்டுகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள், அதைக் கொண்டு நெருப்பு மூட்டுகிறார்கள்.
தேநீர் முதல் சோறு, சப்பாத்தி என அனைத்தும் இந்த மூன்று செங்கல் வைக்கப்பட்ட அடுப்பிலேயே தயாராகிறது. ‘என் மகள் ‘நாப்கின்’தான் பயன்படுத்துவேன், துணியை பயன்படுத்தமாட்டேன் என்கிறாள்’ என்று அக்கம்பக்கம் யாருமில்லை என்பதை பார்த்து உறுதி செய்துவிட்டு, மெதுவாக சொல்கிறார் ரேணு என்ற பெண்மணி.
பிரச்சனைகள் நிறைய உள்ளன
இருவேளை உணவுக்கே சிரமமாக இருப்பதாக சொல்கிறார் ரேணு. வீடே இல்லாமல் சாலைகளையே வீடாக்கிக் கொண்டிருக்கும் தங்களால், பணம் கொடுத்து மாதாமாதம் சானிடரி நாப்கின்கள் வாங்கமுடியாது என்கிறார் அவர்.
சிறிது தொலைவில் சாலையோரத்தில் படுத்திருக்கும் பிங்கியிடம் பேசினேன். “நான் மாதவிடாயின்போது துணியை பயன்படுத்துகிறேன். நிறைய சங்கடங்கள் ஏற்படும். ஆனால் என்ன செய்ய முடியும்? பிரச்சனைகளால் தலையே வெடித்துவிடும் போல இருக்கும். வேலையும் இல்லை, பணமும் இல்லை” என்று விரக்தியாக பேசுகிறார் பிங்கி.
இப்படி வேலையில்லாத வீடில்லாத பலரை எல்லா இடங்களிலும் சாலையோரங்களில் பார்க்கமுடிகிறது. அவர்கள் பலவிதமான சிக்கல்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டாலும், மாதவிலக்கு நாட்களில் சந்திப்பதுதான் உச்சபட்ச கொடுமை.
சானிடரி நேப்கின்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருக்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஜர்மீனா இஸ்ரார் கான்.
அவர் இதுபோன்ற விளிம்பு நிலைப் பெண்களை மனதில் வைத்துதான் பொதுநலன் மனு தாக்கல் செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
பொதுநலன் மனுவை விசாரித்த நீதிமன்றம், பொட்டு, கண் மை, குங்குமம் போன்ற அலங்கார பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை கட்டண வரியில் இருந்து விலக்கு அளித்திருக்கும்போது, பெண்களின் அடிப்படை தேவையான சேனிடரி நேப்கின்களுக்கும் ஏன் விலக்கு அளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
பிபிசி, ஜர்மீனாவிடம் பேசியபோது, “ஏழைப் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் சாம்பல், மணல் போன்றவற்றை செய்தித்தாள்கள்களுக்குள் சுற்றிவைத்து அதை நாப்கினாக பயன்படுத்துகிறார்கள், அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம்.”
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2015-16) அறிக்கையின்படி, 48.5 சதவிகித கிராமப்புறப் பெண்களும், 77.5 சதவிகித நகர்ப்புற பெண்களும் மட்டுமே சேனிடரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த இந்தியப் பெண்களில் 57.6 சதவீதத்தினர் மட்டுமே சானிடரி நேப்கின்களை பயன்படுத்துகிறார்கள்.
சானிடரி நேப்கின்கள் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று, இதற்கு இந்த அளவு வரி விதிக்கவேண்டியது அவசியம் இல்லை என உயர் நீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.
“பொட்டு, கண் மை போன்றவை அத்தியாவசியமானவை இல்லையென்றபோதிலும் அவற்றிருக்கு வரிவிலக்கும், பெண்களுக்கு அத்தியாவசியமான சானிடரி நாப்கின்களுக்கு வரி விதிக்கிறீர்கள். இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?” என்று உயர்நீதிமன்றம் சீற்றத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் என்ன கூறுகிறது?
சானிடரி நாப்கின்களுக்கு வரி விதிப்பதற்கு முன், அது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகத்தின் கருத்து கேட்டறியப்பட்டதா இல்லையா என நீதிமன்றம் அரசை வினவியுள்ளது.
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது பெருமளவிலான மக்களின் நலனை கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
இதுதொடர்பான இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகத்தின் கருத்தை தெரிந்துக்கொள்ள பிபிசி முயன்றது. பிபிசியின் சார்பில் அனுப்பப்பட்ட மூன்று மின்னஞ்சல்களுக்கும் அமைச்சகத்தில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
இருந்தபோதிலும் அமைச்சர் மேனகா காந்தியின் அந்தரங்கச் செயலர் மனோஜ் அரோராவிடம் பிபிசி நிருபர் தொலைபேசியில் பேசினார். சானிடரி நேப்கின் தொடர்பான எழுத்துபூர்வமான தகவல்கள் எதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திடம் இல்லை. எனவே இதுதொடர்பாக பதில் கூறமுடியாது என்று அரோரா கூறிவிட்டார்.
பொதுநலன் மனுவின் மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 14ஆம் தேதியன்று நடைபெறும். ஜர்மீனாவின் வழக்குரைஞர் அமித் ஜார்ஜிடம் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி நிருபர் பேச முயற்சி செய்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்த விவகாரம் பற்றி பேசுவது முறையானதல்ல என்று அவர் கூறிவிட்டார்.
சானிடரி நேப்கின்கள் மீதான வரிக்கு எதிராக குரல் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், பெண்களுக்கு சானிடரி நேப்கின்கள் என்பது எந்தவொரு உயிர்காக்கும் மருந்துக்கும் குறைவானதில்லை என்று நம்புகிறார்.
“சானிடரி நேப்கின்களின் விலை மிக அதிகளவில் உயர்த்தபடுவது என்பது பெண்களின் வாழ்க்கைக்கான உரிமைகளை பறிப்பதற்கு சமம்” என்கிறார் சுஷ்மிதா.
இவ்வளவு பெரிய முடிவெடுக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் சரிபாதியான பெண்களின் நலனையும், ஆரோக்கியத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது வருந்தக்கூடியாது என்கிறார் அவர்.
இதற்கு முக்கிய காரணம், கொள்கைகள் வகுப்பதிலும், அரசியலில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பதே என்கிறார் அவர்.
ஏழைப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றிவரும் வினய் கூறுகிறார், “ஏழைப் பெண்களால் சானிடரி நாப்கின்களுக்காக மாதாமாதம் நூற்றுக்கணக்கில் செலவு செய்யமுடியாது. அவர்கள், பழைய, கிழிந்த துணிகளை பயன்படுத்துகிறார்கள். பல இன்னல்களை சந்திக்கின்றனர். நோய்க் கிருமிகள் தொற்றி பாதிக்கப்படுகின்றனர். வாழ்வே சாபமோ என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
பொம்மை, தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், மொபைல் போன், பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற பொருட்களின் பட்டியலில் சானிடரி நேப்கினும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிங்கி போன்ற பெண்களுக்கு சானிடரி நேப்கின்களை வாங்குவது சாத்தியமாகுமா? சானிடரி நேப்கினுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை அரசு எப்படி நியாயப்படுத்தும்? நியாயப்படுத்தினால் அது அநியாயமாகாதா? பெண்களுக்கான அநீதியாக உருவெடுக்காதா?
இந்த கேள்விகளுக்கான பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தற்போது பிங்கி, ரேணு, ரேகா போன்ற பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாம்பலையும், மணலையும் பயன்படுத்துகிறார்கள் என்ற நிதர்சனம் மனதை வாட்டுகிறது.