கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு!

சைதாப்பேட்டையில் பைக் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்துள்ளார்.

மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது மொசீன் அபாஸ் (30). இவரது மனைவி அமீனா பந்த்னால் (28). இருவரும் நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை – சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை முகமது மொசீன் அபாஸ் ஓட்டினார்.

இரவு 9.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மாநகராட்சி ஒப்பந்த குப்பை லாரி பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த அமீனா பந்த்னால் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னே உயிர் இழந்தார். முகமது மொசீன் அபாஸ் காயம் அடைந்தார்.

தகவலறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். முகமது மொசீன் அபாஸை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மனைவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுகுமாரை (47) போலீஸார் கைது செய்தன.