தமிழீழ நீதிமன்றம் மரணதண்டனை விதித்த நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ நீதிமன்றம் மரணதண்டனை விதித்த நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர்க்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஏழாண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த 2006ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் உடுப்பிட்டிப் பிரதேசத்தில் துரைராஜாசிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை ஸ்ரீலங்கா பொலிஸார் இனங்கண்டு கைது செய்வதற்கு முன்பாக தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியற்துறைப் போராளிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து தமிழீழ காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதன்படி காவற்துறையினர், வன்னியில் இருந்த தமிழீழ நீதிமன்றில் அவ்விருவரையும் முற்படுத்தினார்கள். பின்னர் தமிழீழ நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , இருவரையும் குற்றவாளியாக கண்ட நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனையும் மற்றவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதன்பின்னர் வன்னியில் யுத்தம் தீவிரமடைந்ததை அடுத்து விடுதலைபுலிகளின் சிறையில் இருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார். பின்னர் மீண்டும் கொலை குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

மற்றைய நபர் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் பொலிசாரினால் கண்டறிய முடியவில்லை. அந்நிலையில், பொலிஸார் தாம் கைது செய்த நபரை நீதிமன்றில் முற்படுத்தினர்.

மற்றைய நபர் இல்லாமலே வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மன்றில் முன்னிலையான நபரை முதலாம் எதிரியாகவும் மற்றைய நபரை இரண்டாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. வழக்கினை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.

அதன் போது, ”இந்த வழக்கில் இரண்டாம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளவருக்கு விடுதலைப் புலிகளின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இருந்தது. அவருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதனை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எண்பிக்கப்படவில்லை. அதனால் குறித்த நபர் உயிருடன் இருந்தால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படுகின்றது.

மேலும் இக் கொலையானது தீடிரென ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டது என்பதனை வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்பட்டு உள்ளமையினால், இதனை கைமோச கொலையாக மன்று காண்கிறது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரிக்கு (தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்) ஏழாண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்படுகின்றது. அதனைச் செலுத்தத் தவறின், ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதலாம் எதிரிக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. அது ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கபப்டுகின்றது.” என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.