புகைப்படக்கலையில் மிக முக்கியமான விஷயம், டைமிங். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்போதும் பேசப்படும் விஷயமாக மாறிவிடும்.
ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் சிரித்தபடியே எல்லைக்கோட்டை தொட்டது, துருக்கியின் தூதுவரை பயங்கரவாதி சுட்டது போன்ற படங்கள் வைரலாகக் காரணம் அது எடுக்கப்பட்ட நேரம்தான்.
சமீபத்தில் நேஷனல் ஜியாக்ரபியைச் சேர்ந்த சுனில்கோபாலன் என்பவர் எடுத்த போட்டோவும் அப்படித்தான் வைரல் ஆனது. ஏன் வைரலானது என்பதற்கான காரணம், இந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குத் தெரிந்துவிடும்.
இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், அமெரிக்காவின் மடிசன் நகரை சார்ந்தவர் சுனில் கோபாலன். கணினி மென் பொறியாளராக இருக்கும் இவர் பறவைகள் குறித்த புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர்.
உலகின் அநேகப் பறவைகளை புகைப்படம் எடுத்திருக்கும் கோபாலன், அட்லாண்டிக் கடல்பகுதிகளில் வசிக்கும் பஃபின் (puffin) பறவைகள் குறித்த வாழ்வியலை புகைப்படம் எடுக்க முடிவு செய்கிறார். இதற்காக பஃபின் பறவைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
பஃபின் பறவைகள் அட்லாண்டிக் கடலின் தீவுகளில் இருப்பதை உறுதி செய்தபின்பு, பறவைகளை புகைப்படம் எடுக்க மக்கள் நடமாட்டம் இல்லாத ரிமோட் தீவான ஃபெர் இஸ்லே தீவுக்கு செல்கிறார்.
இந்த தீவு வடக்கு ஸ்காட்லாந்தில் ஷெட்லாண்ட் கடற்கரையிலுள்ள சிறிய தீவு. ஃபெர் இஸ்லே தீவை நான்கு மணிநேர படகு சவாரி அல்லது ஒரு சிறிய விமானம் மூலமாக மட்டுமே சென்றடைய முடியும்.
தீவை நோக்கிய பயணம் மிகவும் சவாலானது. கோபாலனின் பஃபின் பறவைகள் குறித்த தேடலின் பயணங்கள் அவரை மத்திய மேற்கு நாடுகளில் இருந்து கிளாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றது, அங்கிருந்து சிறிய ரக விமானத்தில் ஃபெர் இஸ்லே தீவுக்கு பயணித்தார்.
தீவில் சுனில் செலவழித்த நாட்களில் வானிலை வசிப்பதற்கு தகுந்ததாகவே இருக்கிறது. ஒரு மழைநாளின் காலை பொழுதில் காற்று அதிகமாக வீச ஆரம்பிக்கிறது.
மழை தூற ஆரம்பிக்கிறது. இருந்தாலும் வித்தியாசமான புகைப்படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே காத்திருக்கிறார் சுனில்.
திடீரென அப்போது மழையில் நனைந்தபடிக்கு கடலில் இருந்து கரைக்கு வருகிற பஃபின் பறவையை கவனிக்கிறார்.
அதன் அலகில் சிறிய மீன்கள் பலவற்றை வைத்திருப்பதை பார்க்கிறார்.
உடனடியாக தன்னுடைய கேமிராவில் அதனைப் படம் பிடிக்கிறார். நல்ல புகைப்படம் எடுத்த திருப்தியும், மகிழ்ச்சியும் உற்சாகம் கொடுக்க உடனே அதனை ஆன்லைனில் பதிவு செய்கிறார் சுனில்.
இணையத்தின் கையில் ஒப்படைத்துவிட்டால் பிறகு நமக்கென்ன வேலை? போட்டோவை வைரலாக்கிவிட்டது இணையம்.
அட்லாண்டிக் பகுதியில் இருக்கிற பஃபின் (puffin) பறவைகள் பெரும்பாலான நேரங்களை கடலில் செலவிடுகின்றன.
இனப்பெருக்க காலத்தின் போது நிலப்பரப்பிற்கு திரும்புகின்றன. ஜூன் ஜூலை மாதங்கள் பஃபின் பறவைகள் இனப்பெருக்க காலம். ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவைகள் முட்டை இடுகின்றன.
ஒரு ஆண் பஃபின் பறவையும் பெண்பஃபின் பறவையும் முதல்முறை ஒன்று கூடியதிலிருந்து அவை இறக்கும்வரை சேர்ந்தே வாழ்கின்றன..
பஃபின் (puffin) பறவைகள் இனப்பெருக்கம் செய்யத்தயாராகும் காலத்தில் அவற்றின் அலகுகளில் பிரகாசமான வரிகள்தோன்றும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் பஃபினின் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படும். அலகில் தோன்றும் சிவப்பு நிறத்திலான பிரகாசமான அடையாளத்தைக் கொண்டு இப்பறவைகள் தூரத்திலுள்ள மற்ற பறவைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.
இவை வருடா வருடம் முட்டையிடுகின்றன. முட்டையிட்டு ஆறுவாரங்களில் குட்டி பஃபின் வெளியுலகத்திற்கு வரும். பஃபின் பறவைகளால் நீரினுள் இருபது அடிக்கும் அதிகமாக கடல் ஆழத்திற்கு செல்ல முடியும்.
இவை நீரினுள் ஆழ்ந்து செல்லும்போது மூக்கின் பகுதியிலுள்ள சிறிய அடைப்பான் (Flaps) நீர் உட்புகாதவாறு தடுத்துவிடுகின்றது.
தாய்ப்பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கிப் பறந்து வரும்.
மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்றுவிடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும்.
பஃபின் பறவைகளுக்கு “கடல் கிளி” என்ற இன்னொரு பெயரம் உள்ளது. இதன் வாழ் நாள் இருபது ஆண்டுகளில் இருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வர ஆகும்.
(பஃபின் பறவைகளும் பெங்குயின்களும் தோற்றத்தில் ஒரேவகையாகத் தோன்றினாலும் பல்வேறு குணாதிசயங்களில் வேறுபடுகின்றன.
பஃபின் பறவைகளுக்கும் பெங்குயின்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் பஃபின் பறவைகள் பறக்கக்கூயன. ஆனால் பெங்குயின்களுக்கு சிறகு இருந்தாலும் அவற்றால் அவ்வாறு பறக்க இயலாது.
பஃபின் பறவைகள் வடதுருவத்திலும் பெங்குயின்கள் தென்துருவத்திலும் வாழ்வது மற்றுமொரு வித்தியாசம். இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இவை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்வதுடன் அப்பிரதேசங்களுக்கு ஏற்றவகையில் தம்மை மாற்றிக் கொள்கின்றன.)