பலிலா(உபி) : உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பேரணியில் இஸ்லாமியப் பெண் ஒருவரின் புர்கா நீக்கப்பட்ட விவகாரம் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்பொழுது உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பலிலா நகருக்கு வந்திருந்தார்.
அங்கு நடைபெற்ற பேரணி ஒன்றிலும் அவர் கலந்து கொண்டார். அந்த பேரணியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட பெண்களில் இஸ்லாமிய பெண் ஒருவரும் அடக்கம். முதல்வர் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, நிகழ்வின் பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் காவலர்கள் அந்த இஸ்லாமிய பெண்ணின் புர்காவினை நீக்கச் சொல்லிய வீடியோ தற்பொழுது இணைய தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பின்னர் அந்த பெண்ணின் பெயர் சாய்ரா என்பதும், அவர் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் என்பதும் தெரிய வந்தது.
தனது கிராமத்தில் இருந்து தங்களது பாரம்பரிய உடையுடன் பேரணியில் ககல்ந்து கொள்ள வந்ததாகவும், அங்கு பெண் காவலர்கள் தனது புர்காவினை நீக்கச் சொல்லியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இணைய தளங்களில் பரவத் தொடங்கிய பின்னர் உடனடியாக நகர நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட நீதிபதி சுரேந்திர விகுஜராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேபோல் காவல்துறை சார்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் கூறியதாவது:
சம்பவம் தொடர்பான விடியோ பதிவு பெறப்பட்டுள்ளது. உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலவர் கலந்து கொள்ளும் பேரணியில் யாரும் கருப்பு கொடி காட்டக் கூடாது என்று எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது.
இருந்தாலும் இந்த சம்பத்தில் என்ன நடந்தது என்று முறையாக விசாரிக்கப்படும். நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் இந்த விசாரணையினை மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடியோ: