விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி லட்சுமிபுரம் ஜம்ஜம் நகரை சேர்ந்தவர் இக்பால். இவர் விழுப்புரத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மம்முதாபீவி (வயது 41). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
சிலநாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மம்முதாபீவி பின்னர் வீடு திரும்பி வரவில்லை. லட்சுமிபுரத்தில் உள்ள ஓடை கரையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை மர்ம நபர் ஓடை பகுதிக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலையாளி யார்? என்று விக்கிரவாண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (20) என்பவர் அடிக்கடி மம்முதா பீவியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது.
இதன் அடிப்படையில் விக்னேசை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மம்முதாபீவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை தில்லை நடராஜன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். எனது தந்தையுடன் நான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். அவ்வாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்துக்கு வேலைக்கு செல்லும்போது எனக்கும், மம்முதாபீவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மம்முதாபீவியின் கணவர் இக்பால் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீட்டிற்கு வருவார். அவரது குழந்தைகளும் வெளியூரில் தங்கி படித்து வந்தனர். இதனால் மம்முதாபீவி வீட்டில் தனியாக இருந்தார்.
நானும் அவரும் நெருக்கமாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பலமுறை நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
ஒருநாள் நானும், மம்முதாபீவியும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை இக்பால் நேரில் பார்த்துவிட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன் பிறகு அவர் மம்முதாபீவியை கண்டித்தார். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காத மம்முதாபீவி என்னிடம் கூறி அழுதார்.
என்னிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று கூறினார். இதற்கு நான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர் என்னை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்தார். அவரது தொந்தரவு அதிகமானதால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று மம்முதாபீவி என்னை பார்க்க வேண்டும் என்று செல்போனில் கூறினார். நான் அவரை லட்சுமிபுரத்தில் உள்ள ஓடை பகுதிக்கு வருமாறு கூறினேன். நான் கூறியபடி அவர் அங்கு வந்து காத்திருந்தார்.
பின்னர் நாங்கள் இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தோம். அதன்பிறகு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரது தலையை பிடித்து தரையில் ஓங்கி அடித்தேன்.
இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது சேலை முந்தானையால் கழுத்தை நெரித்துக்கொன்றேன்.
பின்னர் அவரை யாரேனும் அடையாளம் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக முகத்தை சிதைக்கும் வகையில் நான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
பின்னர் விக்னேசை விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் விக்னேசை அடைத்தனர்