சென்னையை அடுத்துள்ள வேலூர் மாவட்டத்தில், பாடசாலை மாணவியர் நான்கு பேர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபா, சங்கரி, மோனிஷா, ரேவதி ஆகிய நால்வரும் வேலூரில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினோராம் வகுப்பில் படித்து வந்தவர்கள்.
அவர்கள் கல்வியில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று ஆசிரியை ஒருவர் அவர்களைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். மேலும், அவர்கள் நால்வரும் தத்தமது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மறுநாள் (நேற்று) வழக்கம்போல அவர்கள் பாடசாலைக்குச் சென்றனர். ஆனால், பெற்றோரை அழைத்து வரவில்லை என்பதற்காக ஆசிரியை தம்மை மீண்டும் திட்டுவார் என்று பயந்தனர்.
இதனால், பாடசாலையை விட்டு தமது சைக்கிள்களில் கிளம்பிய அவர்கள், அருகிலுள்ள பனப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு கிணறு ஒன்று இருந்ததைக் கண்ட அவர்கள் நால்வரும் தமது காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
சிறிது நேரம் கழித்து கிணற்றுக்கு அருகில் நான்கு சைக்கிள்களும் காலணிகளும் இருப்பதைக் கண்ட சிலர், விபரீதம் நடந்திருக்கலாம் என எண்ணி பொலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி அங்கு வந்த பொலிஸார், பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து வேலூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.