டுபாய் விமானத்தைத் தவறவிட்ட இலங்கையர்..!!

மத்தள விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா விசாவில் டுபாய் செல்லவிருந்த மூவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் விமானத்தைத் தவறவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

ஆண் ஒருவர் உட்பட மூவர் டுபாய் செல்வதற்காக மத்தள விமான நிலையம் வந்தனர். சுற்றுலா விசாவில் வந்திருந்த அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர்.

Captureyyu7“சுமார் ஒரு மணிநேரம் எம்மைத் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் ஒருவழியாக எம்மை விமானத்தை நோக்கிப் போகுமாறு கூறினர். ஆனால் அதற்குள் விமானத்துக்கு நுழையும் கருமபீடங்கள் மூடப்பட்டுவிட்டதால் எமது பயணத்தைத் தொடர முடியவில்லை. இதற்கான நட்ட ஈடு எமக்கு வழங்கப்பட வேண்டும்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான உப்புல் தேஷப்ரிய, பல பெண்கள் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவர், தாம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் செல்வதாகவும் தெரிவித்ததாலேயே நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது சாதாரண நடைமுறையே என்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்ட முறையிலேயே விசாரணைகள் நடைபெற்றுள்ளன என்றும் இதற்காக நட்ட ஈடு வழங்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் முன்வந்தால் அடுத்த விமானத்தில் அவர்களை டுபாய்க்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.