ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, நான்காண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி டோக்கியோவுக்கு சென்றுள்ளார்.
எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. தங்குவதற்கு வீடும் இல்லை. பின்னர் யோசித்து தமது திறமையை நம்பி தன்னை தானே வாடகைக்கு விட முடிவு செய்தார்.
“நான் வேலையற்றவன், நகைச்சுவை உணர்வுமிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும்.
நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன். உணவும், தங்கும் இடமும் அளித்து மாதம் 8 டொலர் சம்பளம் கொடுத்தால் போதும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரது விசித்திர முயற்சிக்கு நிறைய பேர் தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். இப்போது கோட்டானி பிசியான தொழிலாளி.
ஓரிரு நாள்களில் இருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்கள். 8 டொலர் மிகவும் குறைவான ஊதியம் என்பதால், உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பி செய்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்வேன்.
உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டுகொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் என்னை மோசமாக நடத்தியதில்லை. அவர்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.
வீட்டில் உள்ளவர்களை நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய முக்கியமான வேலை.
மற்ற நேரங்களில் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அவர்களுடன் வெளியே செல்வேன். பின்பு உணவருந்துவேன்.
இன்று என்னை வாடகைக்கு எடுப்பதற்குப் பலத்த போட்டி. ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் கோட்டானி.
மட்டுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1000 முறை கோட்டானியை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.