யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புதுப்பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் விடிவுக்காய் களமாடி தமது இன்னுயிரளை ஆகுதி ஆக்கிய மாவீரர்களுக்காக, அவர்களை காலம் தோறும் வணங்கும் நோக்குடன் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தூபி ஒன்றை அமைப்பதற்கு கடந்த காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர்களால் திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த நினைவாலயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டது. அப்போது இருந்த (2005) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் அனைவரதும் நிதி பங்களிப்பில் இந்த தூபி கட்டப்பட்டது.
குறித்த தூபியானது, நான்கு பக்கங்களும் எரியும் மெழுகுவர்த்தி போன்ற வடிவமும் நான்கு மெழுகுதிரிகளில் உள்ளும் கால் பாதங்கள் மற்றும் அந்த பாதங்களுக்குள் பாதங்கள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டது.
”தேசத்தின் விடியலுக்காய் உயிர்க்கொடை தந்தவரே, ஒளி வீசும் உம் பாதங்கள் என்றென்றும் உயிர் தருக” என்ற புனித வாசகம் தூபியின் முகப்புப் பக்கத்தில் எழுதப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவடைந்தவர்களின் நினைவு நாளை புனிதத்துடன் அனுட்டிக்குமுகமாக இத் தூபி அமைக்கப்பட்டது.
இங்கு நவம்பர் மாதம் 21 திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும். பல்கலை வளாகத்தை சூழ அலங்காரங்கள் மாணவர்களால் அமைக்கப்படும். நவம்பர் 27 ஆம் திகதி காலை பல்கலைக்கழக சமூகத்தால் குறித்த தூபியில் மலர் அஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்படும்.
அன்றைய நாள், மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நினைவேந்தல் அனுட்டிக்கப்படும்.
2005 ஆம் ஆண்டில் இருந்து மேற்படி நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு குறித்த தூபி ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டது.
அதன் பின்னர் சிறிது சிறிதாக மாணவர்கள் அதைப் புனரமைத்து வந்தனர். யுத்தம் முடிந்த பின்பு மிகப்பெரிய அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்களால் ஒவ்வோர் ஆண்டும் தவறாது நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டதில் பல மாணவர்களின் உயிர்த்தியாகங்கள் அடங்கியிருக்கின்றன. இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற பேரில் பல மாணவர்கள் இராணுவப் புலனாய்வாளர்களால் சுடப்பட்டும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுமுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வருடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் நிதி பங்களிப்புடன் குறித்த தூபி மீண்டும் முற்றுமுழுதாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களாக சென்று தேசத்தின் விடிவுக்காய் மாவீரர்களாகியவர்களை காலந்தோறும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த மாவீரர் நினைவாலயம், தற்போது புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் நாள் நிகழ்வும் இம்முறை எழுச்சியாக நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.