மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் அரசியல்வாதிகள் தகுதியுள்ளவர்களா??
இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களும் அதை ஆதரிக்கும் தமது கட்சித் தலைமையை பம்மிக்கொண்டு ஆதரிப்பவர்களும் அல்லது எதிர்க்கத் திராணியற்றவர்களும் விக்னேஸ்வரனை கவிழ்க்க நினைப்பவர்களும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுக்களில் காணப்படுகிறார்கள்.
இடைக்கால அறிக்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துவது என்பது ஓர் அக முரண்பாடாகத் தெரியலாம்.
ஆனால் இது ஓர் அகமுரண்பாடு அல்ல. இது மிகத் தெளிவான ஒரு வாக்கு வேட்டை உத்தி. மாவீரர் நாளுக்குப் பின் மறைப்பெடுத்துக்கொண்டு இடைக்கால அறிக்கையோடு தம்மை சுதாகரித்துக்கொள்வது என்பது தமது வாக்காளர்களையும், மாவீரர்களையும் ஏமாற்றுவதுதான்.
ஓர் உத்தியாகத்தானும் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் எவரும் மாவீரர் நாளை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் நினைவு நாளையும் எந்தவொரு தியாகிகள் தினத்தையும் ஒழுங்குபடுத்தத் தகுதியற்றவர்களே.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான அதிகரித்த சிவில் ஜனநாயக வெளி எனப்படுவது தமிழ் மக்களுக்கு நினைவு கூர்வதற்கான ஒரு வெளியை ஓரளவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல நிலைமாறுகால நீதியின் வரையறைகளைப் பரிசோதிப்பதற்கும் அது உதவியுள்ளது.
அது மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசாங்கத்தின் முகமூடிகளைக் கண்டுபிடிப்பதற்கும் அது உதவியுள்ளது. அது மட்டுமல்ல தமிழ்த் தலைவர்களின் கையாலாகாத் தனத்தையும், வழிஞ்சோடித் தனத்தையும், நபுஞ்சகத் தனத்தையும் அது தோலுருத்திக் காட்டியுள்ளது.
இந்த வரிசையில் மாவீரர் நாளும் தமிழ் மிதவாத அரங்கிலுள்ள நடிப்புச் சுதேசிகளையும், வாய்ச்சொல் வீரர்களையும் இரட்டை நாக்கர்களையும் அம்பலப்படுத்தப் போகின்றதா?