“இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி” என்று தன் டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
“என்னுடைய தமிழீழ லட்சியத்தில் இருந்து, நான் மாறினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர் அவர்.
“வாழ்க்கையும், தத்துவமும் வேறுவேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்” என்று கூறியதுடன், தத்துவங்களை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர்.
அத்தகைய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை (நவம்பர் 26) உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
தவிர, நவம்பர் 27-ம் தேதி தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து தங்களின் இன்னுயிரை நீத்த வீரர்களின் நினைவாக, ‘மாவீரர் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஈழ மக்களுக்காக போராடிய மாவீரன் பிரபாகரனை இந்நாளில் நினைவில் கொள்வோம்.
அவரை நேரில் சந்தித்த சில அரசியல் தலைவர்கள், தங்களின் நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
பிரபாகரன் பற்றி திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “விடுதலைப் புலிகளுக்கு என்னுடைய தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் ராணுவப் பயிற்சி முகாம் நடந்தது.
1984-ல் இருந்து 1986-ம் ஆண்டுவரை இந்தப் பயிற்சி நடைபெற்றது. அப்படிப் பயிற்சி முடித்த குழுக்களை ஆய்வு செய்வதற்காக, புலிகள் தலைவர் பிரபாகரன் வருவார்…
ஒருமுறை திம்பு பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதற்காக, இங்கு வந்து தங்கியிருந்தார். சுமார் 23 நாள்கள் இங்கு தங்கியிருந்தார்.
1989-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல்முறையாக ‘மாவீரர் நாளை” அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் களப்பலியான சங்கரின் நினைவாக இதை அவர் அறிவித்திருந்தார்.
இந்த நினைவுநாளுக்கு என்னையும் அழைத்திருந்தார். ஈழத்துக்குச் சென்ற நான், அந்த நிகழ்வில் பங்கேற்ற பின் அவரைச் சந்தித்துப் பேசினேன்.
அப்போது தமிழக அரசியல் நிலைமை குறித்துப் பேசினார். அப்படி பேசிக் கொண்டிருந்தபோது அண்ணாவின் “ஏ தாழ்ந்த தமிழகமே…” என்ற நூலை முதல் முறையாகப் படித்ததாகச் சொன்னார்.
அண்ணாவின் எழுத்து நடை குறித்து பிரபாகரன் சிலாகித்துப் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைக்காக நடக்கின்ற போராட்டங்கள் வெற்றிபெறும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
நேதாஜி மீது பற்றுக் கொண்டவராக இருந்தார். அதன் காரணமாக, அவரைப் பற்றிய நூல்களையும் புகைப்படங்களையும் வைத்திருந்தார்.
தோழர்களுடனான பிரபாகரனின் உரையாடல், மிகுந்த நகைச்சுவை உணர்வோடுதான் இருக்கும். உறுதியான போர்க்குணம் எந்தளவுக்கு அவரிடம் இருந்ததோ, அதே அளவு கனிவான குணமும் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
உதாரணமாக, ஒருமுறை படைத்துறை அறிவியல் பற்றிய நூல்களை வாங்க டெல்லி சென்ற நான், மீண்டும் சென்னை வந்தபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் போய்ப் பார்த்தேன்.
அப்போது மன்னார் மாவட்ட படைத்தளபதி விக்டர் என்பவர் இறந்துவிடுகிறார். இறந்துபோன விக்டரின் வீடியோ கேசட் அப்போதுதான் அங்கு வந்துள்ளது.
அப்போது, நாங்கள் இருவரும் இரும்புக் கட்டிலில் அமர்ந்துகொண்டு இருக்கிறோம். உதவியாளர்கள் அந்தக் கேசட்டை ஓட விடுகிறார்கள்.
பார்த்துக்கொண்டிருக்கிற சமயத்தில், அவருக்குப் பின்புறமாக காவலுக்கு இரண்டு பேர் நிற்கிறார்கள்.
அப்போது, பின்னால் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களிடம் கூறுகிறார் பிரபாகரன். “ஏப்பா நீ அங்கு நிற்காதே நான் சுடப்பட்டு செத்தாலும் பரவாயில்லை. காற்றில்லாமல் சாக விரும்பவில்லை… போய் முன்னால் உட்காருப்பா’ என்று கூறுகிறார்.
அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் விக்டரின் இறுதி நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த அவரின் கண்களில் கண்ணீர் கோத்துக்கொண்டு வழிகிறது. அதை அந்தப் பாதுகாவலர்கள் பின்னால் இருந்து பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, அப்படி அவர்களை முன்னால் உட்காரச் சொன்னார் என்பதை அருகில் இருந்த நான் தெரிந்துகொண்டேன்.
வழிநடத்தக்கூடிய தலைவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது கொரில்லா போரின் ஒரு விதிமுறைதான்.
ஆனால், எப்போதுமே போர்க்களத்தில் நிற்கவேண்டும் என்று அவர் விரும்புவார். அப்படி ஒருமுறை அவர் வீட்டில் இருந்த நேரத்தில் குளிக்கச் செல்கிறார்.
அந்தச் சமயத்தில் இந்திய அமைதிப்படை அவருடைய வீட்டுப்பகுதியை ஆக்கிரமித்து தாக்குதலை நடத்துகிறது.
சத்தம்கேட்டு குளித்துக் கொண்டிருந்தவர் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஓடி வந்து துப்பாக்கியுடன் களத்தில் குதிக்கிறார். அவர்களுக்குப் பதிலடியும் கொடுக்கிறார்.
பின்னர் இயக்க வீரர்கள், ஆயுதங்களை வாங்கிக் கொண்டு விடுவிக்கிறார்கள். அப்படி நடந்தத் தாக்குதலில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அந்த நிகழ்வைக்கூட மிக வேடிக்கையாகச் சொல்வார்.
எந்தவொரு சென்சிட்டிவான சூழலையும் மிக இயல்பாக கையாளக்ககூடியவர் பிரபாகரன்.
அவருடைய மனைவி மதிவதனி மற்றும் குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் குடும்பத்தினருடன் பயணத்தை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்.
அப்படி ஒருமுறை தமிழகத்தில் இருந்து ஈழம் செல்லும்போது, குழந்தைகள் ஒரு படகிலும், மனைவியை வேறொரு படகிலும் அனுப்பி வைத்தார்.
இவரும் ஒரு படகில் சென்றார். ஈழம் சென்றடைந்ததும் அவருடைய மனைவி மதுவதனி. ‘எதுவும் பிரச்னை இருந்தா?’ என்கிறார்.
அதற்கு பிரபாகரன், ‘சூழல் மிகவும் மோசமாக இருந்தது. உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தான் தனித்தனியாக அனுப்பிவைத்தேன்.
உன்னை இழந்து என்னால் குழந்தைகளைப் பார்க்க முடியாது. அதேபோன்று குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு, அதை நினைத்துக்கொண்டு வாழ்வதும் கடினம்’ என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் படைக்கு ஆள்களைச் சேர்க்கும்போது, அதற்கென விதிகள் உள்ளன. அந்த விதியில், இயக்கத்தில் ஏற்கெனவே இருப்பவர்களின் வீட்டில் இருந்து எடுக்க மாட்டார்கள்.
அதேபோன்று ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் போரில் பங்கேற்று களத்தில் மடிந்து போனால், அப்படி மடிந்துபோனவர்களின் வீட்டில் இருந்தும் எடுக்க மாட்டார்கள்.
அப்படி விதிமுறைகள் இருக்கின்ற சூழலில் ஒரு அம்மா பிரபாகரனுக்கு கடிதம் எழுதுகிறார்.
அந்தக் கடிதத்தில் ‘நீங்கள் விடுதலை இயக்கப்படையை நடத்தக் கூடியவர் மட்டுமே. நீங்கள் இன்று இருப்பீர்கள், நாளை இல்லாமல் போவீர்கள். ஆனால், தனி நாடு கோரிய எங்களுடைய போராட்டம் தொடரும். அதற்காக எங்களுடைய அனைத்துப் பிள்ளைகளையும் அனுப்பி வைப்போம்’ என்று முடித்திருந்தார்.
அந்தக் கடிதத்தை பிரபாகரன் படித்துக் காட்டினார். அதோடு இல்லாமல் அந்த அம்மாவின் கடிதத்துக்குப் பதிலும் எழுதினார்.
‘நீங்கள் வசிக்கும் பகுதிக்கு நான் வரும்போது உங்களை வந்து கட்டாயம் சந்திக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அனைவருக்கும் மதிப்பளிக்கும் அந்த குணம்தான், அனைவரின் உள்ளங்களிலும் அவரை நிலைத்து நிற்கச் செய்துள்ளது” என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை ராமகிருஷ்ணன் பேசுகையில், “டேராடூனில் இந்திய ராணுவப் பயிற்சி அகாடமியில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் பயிற்சி எடுத்தனர்.
அப்படி அங்கு பயிற்சி எடுத்துவிட்டு வந்தவர்கள், கோவையில் எங்கள் தோட்டத்தில் தங்கி இருந்த, புலிகள் இயக்கத்தினருக்குப் பயிற்சி கொடுத்தனர்.
அப்படித்தான் எனக்கு பிரபாகரன் அறிமுகம் ஆனார். அதன்பிறகு 1990-ம் ஆண்டுகளில் வன்னி முகாமில் அவரைப் போய்ச் சந்தித்தேன்.
அனைவரிடமும் மிக எளிமையாக பழகக் கூடியவர். அவர் எடுத்துக்கொண்ட நோக்கத்தில் இருந்து வழுவாதவர்.
பேச்சு, செயல் என அனைத்தையும் மிக நேர்த்தியாகக் கையாளக்கூடிவர் அவர். இயக்கத்துக்காக வீரர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டாலும், அவர்களிடம் மனம்விட்டு பேசக் கூடியவர்.
தனிப்பட்ட ரீதியில் வீரர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தால் ஒரு தாய் போல இருந்து அவர்களை அரவணைத்துப் பேசி, அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவர்.
மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் பிரபாகரன். உதாரணத்துக்கு சிங்கள ராணுவக் கைதிகளை விடுதலைப் புலிகள் சிறை வைப்பார்கள்.
அப்படி சிறை வைப்பவர்களை, மிகுந்த கண்ணியத்தோடும் மனித நேயத்தோடும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
சிறையிலிருந்த சிங்கள கைதி ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அந்தப் பெண், பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார்.
அந்தப் பெண், பிரபாகரனிடம் நிலைமையை எடுத்துக் கூறினார். உடனடியாக அந்த சிங்கள கைதியை விடுவித்து, அந்தப் பெண்ணுடன் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர்.
இதுபோன்ற மனிதாபிமானம் கொண்டவர்களால்தான், போராளியாக இருக்க முடியும் என்பதற்கு பிரபாகரன் மிகச்சிறந்த உதாரணமாக விளங்கினார்” என்றார்.