குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர், `நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் காங்கிரஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நாட்டின் பிரதமராகியுள்ளார் என்பதைக் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் டீ விற்றேன். ஆனால், தேசத்தை அல்ல. ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக நிறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் உத்தி. எனவே, காங்கிரஸ் குஜராத்தின் பன்மைத்துவ கலாசாரத்தைப் பாழ்படுத்துவதை மக்கள் அனுமதிக்கக் கூடாது’ என்று கறாராகப் பேசியுள்ளார்.