பிரபஞ்ச அழகியாக தென்னாப்பிரிக்கப் பெண்ணை மகுடம் சூட்டவைத்த அந்தக் கேள்வி!

2017-ம் ஆண்டின் ’மிஸ் யூனிவர்ஸ்’ மகுடத்தை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் நெல் பீட்டர்ஸ் தட்டிச் சென்றுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ்

பிரபஞ்ச அழகியைத் தேர்வுசெய்யும் விழாவுக்காக, நேற்று இரவு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஜமைக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 92 பெண்கள் பங்கேற்றிருந்தனர். கொலம்பியாவைச் சேர்ந்த லாரா, ஜமைக்காவைச் சேர்ந்த டாவின்னா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் ஆகியோருக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. பலகட்ட போட்டிகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க அழகி டெமி லெய் நெல் பீட்டர்ஸ் தலையில், பிரபஞ்ச அழகிக்கான மகுடம் வைக்கப்பட்டது. 22 வயதான டெமி, வணிக மேலாண்மைப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள டெமியிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்வியும் பதிலும்…

பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை எது?

”ஒரு சில நிறுவனங்களில் ஆண்கள் செய்யும் அதே பணியைத்தான் பெண்களும் செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 75 சதவிகிதம்தான் வழங்கப்படுகிறது. இது சரியான முறை அல்ல.”

இவ்வாறு டெமி பதிலளித்துள்ளார். இந்த ஆண்டு, மிஸ் யூனிவர்ஸ் போட்டியின் முதல் ஐந்து இடங்களில், அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அரங்கில் மிளிர்ந்த சென்னை பெண்!

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஷ்ரதா ஷஹிதர்,முதல் 16 இடங்களில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் சர்வதேச அரங்கில் தன்னம்பிக்கையுடன் பங்குபெற்றதுக்கு நெட்டிசன்ஸ்  மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஷ்ரதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு!

india